காவிரி பிரச்சினை விவகாரத்தினால் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் நெல், கரும்பு, சோளம் போன்ற பயிர்கள் மற்றும் வெங்காயம், மரவள்ளி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி மற்றும் பிரிமியம் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுத் தொடர்பாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
நாமக்கல் மாவட்டத்தில், 2023-24- ஆம் ஆண்டு சிறப்பு மற்றும் இரபி பருவத்தில் நெல் (சம்பா), உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, சோளம், கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, தக்காளி மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுபிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப.. கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் (சம்பா) பயிருக்கு ரூ347.53-ஐ 15.12.2023-க்குள்ளும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.128.03-ஐ 30.11.2023- க்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ312.70-ஐ 31.12.2023 - க்குள்ளும், பச்சைபயறு மற்றும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ207.48-ஐ 15.11.2023- க்குள்ளும், மற்றும் கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ2,914.60-ஐ 30.03.2024- க்குள்ளும் செலுத்த வேண்டும்.
தோட்டக்கலை பயிர்:
தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ2050.10-ஐ 30.11.2023- க்குள்ளும், வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1857.44-ஐ 29.02.2024- க்குள்ளும், தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1,017.64-ஐ 31.01.2024- க்குள்ளும், மற்றும் மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1548.70-ஐ 29.02.2024- க்குள்ளும் செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC CODE எண்ணுடன்), ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு/ சந்தேகங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. இ.ஆ.,ப., தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாகியுள்ளது- தீர்மானம் மீது முதல்வர் உரை
மானியத்தில் ட்ரோன் வழங்கும் திட்டம்- இவ்வளவு சிறப்பு சலுகையா?