பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மண் வளம். மண்ணின் இயற்பியல் தன்மை மற்றும் இராசாயன இடர்பாடுகளால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மற்றும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்த மண் மேலாண்மையை விளக்குகிறார் மண்ணியல் துறை பேசாரிசியர் பொற்கொடி.
நம் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பான 13 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. அவற்றில், 3.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. மானாவாரி நிலங்கள் அதிக சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கம், வறட்சி போன்ற இயற்கையின் இடர்பாடுகளுக்கு ஆளாகிறது. உழவர்கள் தகுந்த நிலவள மேலாண்மை முறைகளைக் கையாண்டு மண் வளத்தை மேம்படுத்தி நிலையான வேளாண்மைக்கு வித்திட வேண்டயது அவசியமாகிறது.
நம் நாடு ஒரு காலத்தில் மண் வளத்தில் முன்னோடியாக இருந்தது. தொழிற்பட்ட விவசாயம், காடுகள் அழிப்பு, வறட்சி உள்ள இடங்களில் மரங்கள் அழிப்பு போன்ற காணங்களால் இந்தியாவின் மண் வளம் குறைய காரணம் ஆக இருக்கிறது. மேலும், மண்ணின் இயபில் தன்மைகள் மாறுபடுவதாலும், இரசாயன இடர்பாடுகளாலும் மண் வளம் பாதிக்கப்படுகிறது.
மண்ணின் இயற்பியல் தன்மை மாற்றங்களால் ஏற்படும் இடர்பாடுகள் :
குறைந்த நீர் உட்புகு திறன்
அதிக நீர் உட்புகு திறன்
அடி மண் இறுக்கம்
மேல் மண் இறுக்கம்
இளகிய நன்செய் நிலம்
மணல் கலந்த மண்
குறைந்த நீர் உட்புகு திறன்
தமிழ்நாட்டில் 7 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் இவ்வகை மண் பரவியுள்ளன. களி அதிகமாக மண்ணில் இருப்பதால் நீர் உட்புகு திறன் குறைவாக இருக்கும். அதாவது மணிக்கு 0.5 செ.மீ.-ஐ விடக் குறைவாக இருக்கும். மண்ணில் நீர் புகாமல் இருப்பதால் மண் அரிமானம் ஏற்பட்டு சத்துக்கள் மண்ணின் மேற்பரப்பிலிருந்து அடித்துச் செல்லப்படுகின்றன.
மேலாண்மை முறைகள்
-
தகுந்த வடிகால் வசதி செய்ய வேண்டும்.
-
ஆற்று மணலை, வயல் மண்ணுடன் கலப்பதன் மூலம் மண்ணின் களித் தன்மையைப் குறைக்கலாம்.
-
பசுந்தாள் உரம், தொழு உரம், மட்கு உரம், போன்ற அங்கக உரங்களை அதிக அளவில் மண்ணிலிடலாம்.
-
மேட்டுப் பாத்திகள், பார்கள் அமைத்து பயிர் செய்யலாம்.
அதிக நீர் உட்புகு திறன்
தமிழ்நாட்டில் 24 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் இம்மண் வகைகள் உள்ளன. இவ்வகை மண்ணில் 70 விழுக்காட்டுக்கும் மேலாக மணல் உள்ளதால் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் பிடித்துக்கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். இதனால் மண்ணின் கட்டமைப்பு திடமற்றதாகவும், அங்ககச் சத்து குறைவாகவும் இருக்கும்.
மேலாண்மை முறைகள்
-
மிதமான ஈரப்பதத்தில் 400 கிலோ கல் உருளையை கொண்டு 8 முதல் 10 முறைகள் வரை வயலில் உருட்ட வேண்டும்.
-
களிமண் அல்லது குளத்து வண்டல் மண் ஹெக்டேருக்கு 100 டன் வரை வயலில் இட்டு மேம்படுத்தலாம்.
-
தொழு உரம், உயிர் மட்கு உரம் போன்ற அங்கக உரங்களை அதிக அளவில் இடலாம்.
-
பயிர் சுழற்சி முறையில் பசுந்தாள் உரங்களைப் பயிரிடலாம்.
அடி மண் இறுக்கம்
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இவ்வகைக் குறைபாடு உள்ளது. அடி மண் இறுக்கம், செம்மண் வகைகளில் களி மேல் மண்ணிலிருந்து அடி மண்ணுக்கு அடித்து செல்வதாலும், இரும்பு, அலுமினியம் ஆக்சைடுகள், சுண்ணாம்பு கார்பனேட்டுகள் உருவாவதாலும் கரிசல் மண் வகைகளில் சோடியம் அயனி அதிகம் இருப்பதாலும் மற்றும் மண்ணின் பரும அடர்த்தி 1.8 மெ.கி.மீ-3 க்கும் மேல் இருப்பதாலும் அடி மண்ணில் இறுக்கம் ஏற்படுகிறது. இவ்வகையான மண்ணில் நீர் மற்றும் காற்று உட்புகு திறன் குறைவாகக் காணப்படும். இதனால் வேர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து கிரகிக்கும் திறன் குறைகின்றது.
மேலாண்மை முறைகள்
-
2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை மண்ணை உளிக்கலப்பை கொண்டு 0.5 மீ இடைவெளியில் 0.5 மீ ஆழத்தில் உழ வேண்டும்.
-
மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்த அதிக அளவில் அங்கக உரங்களை இட வேண்டும். இதனால் களி அடி மண்ணுக்குச் செல்வதைத் தடுக்கலாம்.
-
கோடை கால உழுவு செய்வதன் மூலம் அடிமண் இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.
-
மரவள்ளிக்கிழங்கு, பருத்தி போன்ற ஆழமான வேர்கள் கொண்ட பயிர்களை சாகுபடி செய்து அடிமண் இறுக்கத்தை தவிர்க்கலாம்.
மேல் மண் இறுக்கம்
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த இடர்பாடு உள்ளது. செம்மண் நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய கூழ்ம ஆக்ஸைடுகளால் மண் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு இறுகி விடுகின்றன. இதனால் விதை முளைப்புத் திறன், வேரின் வளர்ச்சி, நீர் உட்புகு திறன், காற்றோட்டம் ஆகியவை பாதிக்கப்பட்டு மண் அரிமானம் ஏற்படுகின்றது.
மேலாண்மை முறைகள்
-
தொழு உரத்தை ஹெக்டேருக்கு 10 டன் என்ற அளவிலோ அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவை ஹெக்டேருக்கு 12.5 டன் என்ற அளவிலோ வயலில் இட்டு மேம்படுத்தலாம்.
-
ஹெக்டேருக்கு 2 டன் அளவி[ல் சுண்ணாம்பு இட்டு அதை மண்ணில் உழ வேண்டும்.
-
பருமனான விதைகள் கொண்ட பயிர்களை சாகுபடி செய்யலாம்.
-
விதைகள் அளவில் சிறியதாக இருந்தால் விதையின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இளகிய நன்செய் நிலம்
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 25,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த இடர்பாடு உள்ளது. நெல் சாகுபடியைத் தொடர்ச்சியாகச் செய்வதால் மண் தன் திடத்தன்மையை இழந்து இளகி விடுகின்றது. நெல் சாகுபடியில் நீரைத் தேக்கி நிறுத்தி சேற்றுழவு செய்வதால் மண்ணின் கட்டமைப்பு உடைந்து விடுகின்றது. உழவு மாடுகள் மற்றும் வேலையாட்களுக்கு இவ்வகை நிலத்தில் நடப்பதற்கும் பணிகள் செய்வதற்கும் சிரமம் ஏற்படுகின்றது. மண்ணின் பரும அடர்த்தி குறைந்து பயிர்கள் பிடிமானம் இல்லாமல் சாய்ந்து விடுகின்றன.
மேலும் படிக்க...
களர் / உவர் நிலங்களை பயன்தரும் விளை நிலமாக மாற்றுவதற்கான யுக்திகள்!
பருவநிலை மாற்றத்தால் தோன்றும் இழப்பை தவிர்க்க வானிலை முன்னறிவிப்பு மிக அவசியம்
மேலாண்மை முறைகள்
-
அறுவடை செய்வதற்கு 10 தினங்களுக்கு முன்னர் நீர் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.
-
அறுவடை செய்த பின்னர் 400 கிலோ எடை கொண்ட கல் உருளை கொண்டு நிலத்தில் 8 முறை உருட்ட வேண்டும்.
மணல் நில மேம்பாட்டு வழிமுறைகள்
இவ்வகை நிலங்கள் தமிழகத்தில் 14.93 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகின்றது. கடற்கரை பகுதிகள், ஆற்றுப்படுகைகள் மற்றும் பாலைவனங்களில் உள்ள நிலங்களில் 80 சதவீதத்திற்கு மேல் மணல் துகள்கள் காணப்படுகின்றது. நீர் உட்புகுதிறன் அதிகமாக இருப்பதால் நீரைத் தேக்கி வைக்கும் திறன் குறைவாக இருக்கும்.
மேலாண்மை முறைகள்
-
400 கிலோ எடையும், 1 மீ நீளமும் உள்ள கல் உருளை கொண்டோ மிதமான ஈரப்பதத்தில் மண்ணின் மீது குறுக்கும் நெடுக்குமாக 10 முறை உருட்ட வேண்டும்.
-
இப்படி செய்வதால் மணல் துகள்கள் இறுக்கப்பட்டு கிட்டத்தட்ட 30-45 செ.மீ ஆழத்திற்கு மண் இறுக்கமடைகிறது. இதனால் நீர் கடத்தும் திறன் குறைக்கப்படுகிறது.
-
இம்முறையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பின்பற்றலாம்.
-
மண்ணில் உள்ள இயற்பியல் தன்மை மற்றும் இடர்பாடுகளைக் கண்டறிந்து அவற்றைக் நீக்க முறையான மேலாண்மையை கடைபிடிப்பதன் மூலம் மண் வளத்தை பாதுகாத்து நிலையான வேளாண்மைக்கு வழிகுக்கலாம்.
கு. பொற்கொடி
உதவி பேராசிரியர் - மண்ணியல் துறை
வேளாண்மை அறிவியல் நிலையம்,
விருத்தாசலம், கடலுர் மாவட்டம்
தமிழ்நாடு.