திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை சாகுபடி அதிகளவு நடைபெற்று தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பிஏபி பாசனம் மூலமாகவும், சொட்டு நீர் பாசனம் மூலமாகவும், மானாவாரியாகவும் மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation) செய்யப்படுகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் இருப்பதால் விவசாயிகள் இதை விரும்பி பயிரிடுகின்றனர்.
மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation)
கோழி தீவனமாக மக்காச்சோளம் பயன்படுவதால் மக்காச்சோளத்துக்கு சராசரியான விலை கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் படைப்புழு தாக்குதல், தொடர்ச்சியான மழை காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகிறோம். மக்காச்சோளத்துக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச் சோளம் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மக்காச்சோள சாகுபடி செய்ய ரூ.30 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. அதிகபட்சமாக ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை மக்காச்சோளம் மகசூல் கொடுக்கும்.
விலை உயர வாய்ப்பு (Prices are likely to rise)
தற்போது மக்காச்சோளம் 100 கிலோ மூட்டை ரூ.2 ஆயிரத்து 300 வரை விற்பனையாகிறது. மேலும் விலை உயரும் வாய்ப்பு உள்ளதால் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். விலை உயரும் பட்சத்தில், விவசாயிகளின் இந்த முடிவால் இலாபம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க
கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!