கால்நடை வளர்ப்பில் அசோலாவின் பங்கு முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில், அதன் இயல்புகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெ.கருணாகரன், சூ.அருள்செல்வி, மு.சபாபதி, சி.பிரபாகரன், ம.ராஜேஷ், வெ.தனுஷ்கோடி மற்றும் து.பெரியார் ராமசாமி ஆகியோர் ஒருங்கிணைந்து பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடியதுமான விஷயம் கால்நடைக்கான தீவனம்தான். பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழிலில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும்.
அசோலா என்னும் மாற்றுத் தீவனம்:
மாற்றுத் தீவனங்களை குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக் குறைக்க இயலும். இந்த மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதுமான அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது. மிக எளிதாக உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய இந்த அசோலா தற்போது பல்வேறு தொழில்நுட்ப அறிவுமிக்க கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்பட்டு கால்நடை தீவனத்துடன் உணவில் சேர்க்கப்படுகின்றது. தற்போது கால்நடை தீவனத்திற்கானது எனப்படும் அசோலா ஆரம்பத்தில் நெற்பயிருக்கான உரமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அசோலாவின் தன்மைகள் என்ன?
அசோலா (Azolla pinnata) எனும் நீரில் மிதந்து வளரும் தாவரத்தை நெல் வயல்களிலேயே நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது. அசோலாவானது பெரணி (Floating Water Fern) என்ற தாவர இனத்தை சேர்ந்த நெல் வயல்களில் வளரக்கூடிய ஒருவகை நீர் தாவரம் ஆகும். இது மிகமிகச் சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. அசோலா நெல் வயல்களில் இருக்கும் தண்ணீரில் மிதந்து காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு கொடுக்கின்றது.
பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும் அசோலாவின் இலைகளானது முக்கோன வடிவத்திலிருந்து பல கோண வடிவம் வரையும் இருக்கும். இந்த அசோலாவின் இலைகள் 1 செமீ முதல் 2.5 செமீ வரை விட்டமுடையவை. இதன் வேர்கள் 2 செமீ முதல் 10 செமீ வரையில் நீளமுடையவை. இது சிறு இலைகளை உடைய மிதக்கும் தண்டைக் கொண்டது. தண்டின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் மீது ஒன்றாக இலைகள் மாற்று வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு இலையும் மேற்புறம், கீழ்புறம் என இரண்டு பாகங்களை உடையது. இலைகளின் மேல்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக இருக்கின்றது. கீழ்ப்புறம் பச்சையம் அற்றும் நீரில் அமிழ்ந்தும் காணப்படுகின்றது. இலையில் மேற்புறத்தின் உட்பகுதியில்தான் தழைச்சத்தை கிரகிக்கும் அனாபினா அசோலே (Analaena azollae) எனும் நீலப் பச்சைப்பாசி காணப்படுகின்றது. இது தழைச்சத்தை கிரகித்து அசோலாவிற்கு அளிக்கிறது.
அசோலா அதிக அலைகளில்லாத, அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர் நிலைகளில் வளரக் கூடியவை. குளங்கள், சிறு ஓடைகள், நெல் வயல்களில் வளரக்கூடிய அசோலா மிதக்கும் வகைத் தாவரம்தான் என்ற போதிலும் வயலில் சேற்றுடன் கலந்த மண் பரப்பிலும் வளரும் தன்மையுடையது. அசோலா பிலிக்குலாய்டஸ் எனும் இரகம் 10-15 செமீ ஆழமாக வேர்விட்டு மண்ணிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
பிளாங்க்டன் பிளஸ் & ஹார்டிபிளஸ் சந்தைக்காக ICAR-CIBA எடுத்த முன்னெடுப்பு!
தென்னை இலையில் V வெட்டு & வளர்ச்சி பாதிப்பு- காண்டாமிருக வண்டுகளின் அட்டூழியத்துக்கு தீர்வு என்ன?