வருகிற மார்ச் மாதத்திற்குள், திட்டமிட்டபடி, தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி (Interview with the Minister)
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 4 மாத காலத்தில் 7ஆயிரத்திற்கும் அதிகமான மின் மாற்றிகள் மாற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். எஞ்சய 1,072 மின் மாற்றிகள் விரைவில் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மார்ச்சிற்குள் (By March)
மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், அறிவிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
1லட்சம் இலக்கு (1 lakh target)
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு கிடைக்கும்? (Who gets?)
அரசின் விவசாய மின் திட்டத்தினைப் பொறுத்தவரை சாதாரணப் பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுயநிதிப் பிரிவு (Self-funded section)
சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே எதிர்வரும் 2 மாதங்களில், அரசின் இலக்கான 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிடும் என நம்பிக்கையோடு, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
மின்கட்டணம் செலுத்த QR Code: புதிய வசதி அறிமுகம்!
வந்தாச்சு சலுகை விலையில் பால்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!