விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர காத்திருக்கிறது புதிய சன்ன ரக நெல். சோதனை முறையில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டிருந்த புதிய சன்ன ரக நெல், தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. வேளாண் அதிகாரிகள் கூறுகையில், அதிக மகசூல் கிடைத்திருப்பதாக தெரிவித்தனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் வேளாண் பல்கலை மூலம் இயங்கும் திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையம், புதிய சிறிய ரக நெல் விஜிடி-1 ரகம் அறிமுகப்படுத்தி, அமராவதி ஆயக்கட்டு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. அவர்களுக்கு விதை, இடு பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் என அனைத்தும் வழங்கப்பட்டு சாகுபடியை மேற்கொள்ள உதவியது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல் விஜிடி 1
130 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் நடுத்தர உயரம் கொண்ட சம்பா ரகமாகும். சீரகச் சம்பா ரகத்தை போன்றே இந்த ரக சாதம் மிருதுவாகவும், மிதமான வாசனையுடனும், உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு 5,850 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது.
இதுகுறித்து அறிவியல் நிலைய விஞ்ஞானி மருதுபாண்டி கூறுகையில், இந்த சன்னம் ரகம் சீரக சம்பா பிரியாணி அரிசியை விட, அளவில் சிறியதாகவும் மற்றும் சுவை மிகுந்ததாகவும் இருக்கும். நோய் தாக்குதலை எதிர்த்து அதிக மகசூலும் கிடைக்கிறது. சிறிய ரகமாக இருப்பதால் கூடுதல் விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகள், தொடர்ந்து இந்த ரகத்தை சாகுபடி செய்ய இருப்பதாகவும், மற்ற விவசாயிகளுக்கும் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தனர். இதனால், அமராவதி பகுதிகளில் இந்த புதிய ரக நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.