கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், மதகொண்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், ராகி கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று (20.12.2023) திறந்து வைத்தார்.
ராகி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்புரையாற்றினார். அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கரீப் பருவம் 2023-2024-ல் விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதல் செய்வதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யும் ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் நேரடி ராகி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொள்முதல் நிலையங்கள் காலை 09.30 மணி முதல் 01.30 வரையிலும், மாலை 02.30 மணி முதல் 06.30 மணி வரையிலும் செயல்படும்.
சிறு / குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஒளி நகல்கள் (Xerox Copy) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.
விற்பனைக்கு கொண்டு வரும் ராகி சிறு தானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்துக்கொண்டு வர வேண்டும். மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,846/- என்ற அடிப்படையில் தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.
மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கிருஷ்ணகிரி -04343-235421 என்ற எண்ணிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை 044-26422448 என்ற எண்ணிலும், விழிப்புப்பணி அலுவலர் அலுவலகம், சென்னை 044-36424560 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ச.சக்திசரள், துணை மண்டல மேலாளர் கே.ஆர்.பிரேமலதா, உட்பட அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகம், வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் செய்யப்படுவதை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
பத்திரிக்கையாளர் டூ விவசாயம்- பசுமைக்குடில் மூலம் லட்சங்களில் வருமானம்