கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பு (Chief Minister's announcement)
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையக் கூட்டத்தின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை விதி 110ன் கீழ் விவசாய கடன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
ரூ.12,110 கோடி (Rs.12,110 Crore)
அதில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம், எனக் கூறினார்.
இதற்கு முன்னதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2016ல் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது.
விவசாயிகள் வரவேற்பு (Farmers welcome)
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் கூறுகையில், இந்த ஆண்டு, பருவம் மாறி பெய்த மழை, கொரோனா நெருக்கடி, அடுத்தடுத்து தாக்கியப் புயல்கள் என பல வகைகளில் பாதிக்கப்பட்டிருந்த எங்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
கடன் வாங்கி அறுவடை செய்து பல லட்சம் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், இது அரசு எடுத்துள்ள சரியான, தகுந்த நடவடிக்கை. ஆக பயிர்க்கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் பல மாதங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்ட சிம்பிள் டிப்ஸ்!
நீங்க டிகிரி முடிச்ச பெண்ணா? அப்படினா உங்களுக்கு ரூ.50,000!
நெல்லுக்கு எவ்வளவு நீர் தேவை? தெரியுமா உங்களுக்கு!