உடுமலை பகுதியில் தென்னை மரங்களுக்கிடையில் பசுந்தீவன சாகுபடி செய்துள்ள நிலையில் கோடைகாலத்திலும் கால்நடைகளின் (Livestock) தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தீவனப்பயிர்கள்
மழைக்காலங்களில் பயன்படுத்தப்படாத நிலங்களெல்லாம் கூட புல்வெளிகளாக மாறிவிடுவதுண்டு. இதனால் கால்நடைகளின் தீவனத்துக்குத் தட்டுப்பாடு இல்லாத நிலை இருக்கும். ஆனால் கோடைக் காலம் (Summer) தொடங்கி விட்டாலே கால்நடைகளுக்கான தீவனத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பான நிகழ்வாக உள்ளது. இதனைத் தவிர்க்க வைக்கோல் (Paddy straw), சோளத்தட்டை போன்ற உலர் தீவனங்களை விவசாயிகள் அதிக அளவில் இருப்பு வைப்பர். மேலும் பால் கறக்கும் பசுக்களுக்கு தவிடு, பிண்ணாக்கு போன்ற பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனங்களை கொடுப்பர். சமீப காலங்களாக கடைகளில் விற்பனை செய்யப்படும் மாட்டுத் தீவனங்களை (Fodder) மூட்டை மூட்டையாக வாங்கி பசுக்களுக்கு வழங்கும் நிலை உள்ளது. இதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. அதேநேரத்தில் பசுந்தீவனங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ (Vitamin A) சத்து உள்ளதால் கால்நடைகளுக்குக் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கென பசுந்தீவனப் பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பசுந்தீவன வகைகள்
பசுந்தீவனங்களில் தானிய வகை தீவனப் பயிர்கள், புல் வகை தீவனப் பயிர்கள், பயறு வகை தீவனப் பயிர்கள், மர வகை தீவனப் பயிர்கள் என பலவகைகள் உள்ளது. தங்களது நிலத்தின் தன்மைக்கு ஏற்ப விவசாயிகள் பயிரிடும் பசுந்தீவன (Green Fodder) வகையைத் தேர்வு செய்து வருகின்றனர்.
களைகள் கட்டுப்பாடு
களர் மற்றும் உவர் நிலத்தில் கினியாபுல், வேலி மசால், தட்டைப் பயிறு மற்றும் நீர்ப் புல் பயிரிடலாம். நிலத்தில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால் முயல் மசால், தட்டைப்பயறு, கினியாப்புல் சாகுபடி செய்யலாம்.தரிசு நிலம் மற்றும் வரப்பு ஓரங்களில் பயிரிட சூபாபுல், அகத்தி, கிளைரிசிடியா சிறந்ததாகும்.பால் கறக்கும் பசுக்களுக்கு தினசரி 15 கிலோ முதல் 25 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் கோடைக்காலத்தில் தீவனப் பயிர்கள் சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு (Cultivation) தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்க்கும் விதமாக தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மரங்களுக்கிடையில் தீவனப்புல் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்மூலம் கோடை காலத்தில் அதிக நீரிழப்பு தவிர்க்கப்படுகிறது. மேலும் உரம் மற்றும் பராமரிப்புக்காக கூடுதலாக செலவிட வேண்டிய நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அத்துடன் தென்னந் தோப்புகளில் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுவதுடன் கால்நடைகளின் பசுந்தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?