உணவுப் பொருட்களின் நச்சத்தன்மைக்கு காரணமாக உள்ள ரசாயன உரங்களுக்கு மாற்றாக பசுந்தாள் உரங்கள் பயன்படுத்தும் போக்கினை ராஜபாளையம் அருகே தேவதான பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். இதனால் ரசாயன உர செலவு 25 சதவீதம் குறைகிறது என்கின்றனர் ராஜபாளையம் விவசாயிகள்.
பசுந்தாள் பயிர்கள்(Green crops)
சுற்றுப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான சேத்துார், தேவதானம் பகுதிகளில் மலையில் இருந்து வரும் ஆற்று நீர் வரத்தினால் நெல் விவசாயம் அதிகம் நடக்கிறது.
இந்நிலையில் ரசாயன உர பெருக்கத்தின் தாக்கத்தை குறைக்க அறுவடைக்கு பின் நிலங்களை தயார் படுத்தும் போது இயற்கை அடி உரங்களான சாணம், பண்ணை மக்கு பொருட்கள், மண்புழு உரம் போன்றவை தயாரித்து இடுபொருளாக செலுத்த வேண்டும். கால்நடைகள் பற்றாக்குறை, போதிய சாண உர வசதிகள் செய்ய முடியாததால் மண்வளத்தின் கார அமில நிலையை சமன்பாட்டை சீர் செய்ய பசுந்தாள் உர செடிகளை பயிரிடும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. கொளிஞ்சி, சணப்பை, அவுரி உள்ளிட்ட செடிகள் பசுந்தாள் உர செடிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அடி உர செடிகளை பூக்கும் பருவத்திற்கு முன் மடக்கி உழுதல் முறையில் மண்ணோடு, மண்ணாக தொழு உரமாக்குகின்றனர். விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தும் போது ஏற்படும் உர செலவை விட இது குறைவாக உள்ளது.
எதிர்பார்க்கும் மகசூல் பெற பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து விடுவதன் மூலம் 25 சதவீதம் உர செலவு குறைகிறது. இப்பயிரில் நைட்ரஜன் அதிகமாக உள்ளதால் சேத்துார், தேவதானம் பகுதிகளில் நெல் விதைக்கும் முன் தொழு உரமாக பயன்படுத்துகின்றனர். மற்ற விவசாயிகளும் பசுந்தாள் உர வளர்ப்பில் ஆர்வமுடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
வரப்பு பயிா் சாகுபடி: கூடுதல் வருவாய் சாத்தியம்..!
விவசாயத்தில் அதிக லாபம் பெற வேளாண்துறையின் சூப்பரான அட்வைஸ்..!