பூனைக்காலியானது பொதுவாக மற்ற பகுதிகளில் வெல்வெட் பீன் (Velvet bean) , முக்குனா ப்ரூரியன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வெப்பமண்டல பகுதியில் பயிரிடப்படும் காயாகும். இது ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பிற பாரம்பரிய சிகிச்சை முறைகளுக்காகவே பெயர் பெற்றது.
ஒரு முறை நடவு செய்தால் போதும் மூன்று வருடங்களுக்கு அறுவடை செய்யலாம். வெள்ளை பூனைக்காலியை விட கருப்பு பூனைக்காலியில் அதிக அளவு ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமைத்து சாப்பிடும் வழக்கம் நடைமுறையில் குறைவாக இருப்பினும், மருத்துவ தேவைக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தாயகம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என கருதப்படுகிறது. இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். பூனைக்காலி சாகுபடி மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
சாகுபடி முறை:
வெல்வெட் பீன் (Velvet bean) வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் 25°C மற்றும் 35°C (77°F மற்றும் 95°F) இடையே வெப்பநிலையினை தாங்கி செழித்து வளரும். பூனைக்காலியினை சாகுபடி செய்ய கரிசல் மண் மற்றும் செம்மண்ணும் ஏற்றது. 5.5 முதல் 7.5 வரை pH உள்ள நன்கு வடிகட்டிய மண் சிறந்தது. பூனைக்காலியின் விதைகள் பொதுவாக மழைக்காலத்தில் நேரடியாக வயலில் விதைக்கப்படும். இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
வெல்வெட் பீன் (Velvet bean) அவரைப் போன்று ஒரு ஏறும் கொடி வகையாகும். பூனைக்காலியானது 15 மீட்டர் (49 அடி) உயரம் வரை வளரும் தன்மைக் கொண்டது. காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். முழுமையாக முதிர்ச்சி அடைவதற்கு முன்னர் அறுவடை செய்யப்படுகிறது. காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற பால் தன்மையுள்ள சுனை இருக்கும்.
ஆரோக்கிய நன்மை:
பூனைக்காலியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுக்கிறது. இது விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் கருவுறுதல் தன்மையினை அதிகரிப்பதால் இன்றளவு ஆயுர்வேத மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பூனைக்காலியில் (Velvet bean) எல்-டோபா (லெவோடோபா) நிறைந்துள்ளது, இது மூளையில் உள்ள நரம்பியக்கடத்தியான டோபமைனின் முன்னோடியாகும். L-Dopa பொதுவாக பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் டோபமைன் அளவை நிரப்பும் திறன் உள்ளது. மேலும் மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த மனநிலையையும் மேம்படுத்த உதவுவதாக கருதப்படுகிறது.
சில ஆய்வுகளின் முடிவில் பூனைக்காலியானது மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
பூனைக்காலி சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதை ஒரு துணைப் பொருளாக அல்லது மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும் காண்க:
விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!