நிலமும், நீர் பாசனத்திற்கேற்ற தண்ணீரும் பயிர் விளைச்சலுக்கு அவசியம். எனவே பாசன நீரின் குணம், தரத்தை (Quality) அறிந்து கொள்வது முக்கியமானது.
நீரின் குணம் (Character of Water)
நீரின் குணம் அதில் கரைந்துள்ள உப்பு சத்துகளின் அளவு, தன்மையைப் பொறுத்து மாறும். சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் சேர்ந்த உப்புகள் நீரில் கரையக்கூடியவை.
மேலும் நீரில் கரைந்துள்ள உப்புகளின் மொத்த அளவு, உப்பில் சோடியம் வகையின் விகிதம், கார்பனேட், பை கார்பனேட் உப்புகளின் அளவு, போரான் போன்ற கனிமப் பொருள் ஊட்டங்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருப்பது போன்ற காரணங்களும் நீரின் குணத்தை நிர்ணயிக்கின்றன.
நல்ல மகசூல் (Higher Yield)
பயிர் மகசூலை பொறுத்து நீரில் கரைந்துள்ள உப்புகளின் மொத்த அளவு இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில்150 மில்லிகிராம் அல்லது அதற்கு குறைவாக உப்புகள் இருந்தால் நல்ல மகசூல் (Yield) பெறலாம். 150 - 500 மி.கி வரையிருந்தால் திருப்தியான மகசூல், 500 - 1000 மி.கி., வரை இருந்தால் குறைந்த மகசூல் கிடைக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 1500 மில்லிகிராமும் அதற்கு மேலும் இருந்தால் உப்பு எதிர்ப்பு சக்தியுள்ள தாவர வகைகளை சாகுபடி செய்யலாம்.
உப்புத்தன்மை வேண்டாம் (No Salty)
பாசன நீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு லிட்டருக்கு 1500 மி.கி. மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக உப்புகள் சேர்ந்தால் அவை குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்.
நீரின் கார அமிலத்தன்மை 7.5க்கு மேல் இருந்தாலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 300 மி.கி கார்பனேட், 2 மி.கி. இரும்பு, ஒரு மி.கி. மேலான அளவில் மாங்கனீஸ் இருந்தால் குழாய்களில் உப்பு படிகின்றன. எனவே அதிக உப்புத்தன்மை கொண்ட தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இளையராஜன்
இணைப்பேராசிரியர் மண்ணியல்துறை
பன்னீர்செல்வம்
இயக்குனர், நீர் நுட்ப மையம் வேளாண் பல்கலைகழகம்
கோவை,
94436 73254
மேலும் படிக்க