ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் கால்நடை பூங்காவை, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் விருத்தாசலம் கூட்டுரோட்டில் நிறுவியுள்ளது தமிழக அரசு. இந்த பூங்காவானது 1,002 ஏக்கர் பரப்பளவில் 1022 கோடி ரூபாயில் பல்வேறு வசதிகளுடன் உருவாகி வருகிறது. கால்நடை பூங்காவின் (Livestock Park) முக்கிய அங்கமாகக் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை சமீபத்தில் துவக்கி வைத்த பின்பு, அதில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edapaddy palanisamy)
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கறவை மாடுகளின் (Dairy cows) எண்ணிக்கை 7.4 சதவிகிதமும், வெள்ளாடுகள் 17 சதவிகிதமும், கோழிகளின் எண்ணிக்கை 2.84 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகளும், ஒரு கோழி மருத்துவ ஆராய்ச்சி மையமும் செயல்பட்டு வருகின்றன. புதியதாக, உடுமலைப்பேட்டையிலும், தேனியிலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன என்று தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு:
அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ மாட்டுப்பண்ணையில் ஒரு பசு மாடு ஒரு நாளைக்குச் சராசரியாக 65 லிட்டர் பால் கொடுக்கிறது. நம் ஊரில் கலப்பின பசுக்கள் மிகக் குறைந்தளவே பால் கொடுக்கின்றன. குறைந்தது 35 முதல் 40 லிட்டர் பால் தரும் மாடுகளை நாம் உருவாக்கினால் விவசாயிகளின் வருமானம் (Income) இரட்டிப்பாகும். அதிக பால் தரும் கலப்பின மாடுகளை உருவாக்கவும், அதை விவசாயிகளுக்கு வழங்கும் பணியே இந்த கால்நடை பூங்காவின் முதன்மையான நோக்கமாக இருக்கும். இந்த கால்நடை பூங்காவுக்குத் தேவையான நீரைக் காவிரி (Cauvery) ஆற்றிலிருந்து 260 கோடி ரூபாய் செலவில் தனியே பைப்லைன் மூலம் கொண்டு வரப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கால்நடை பூங்காவின் சிறப்பம்சம்
புதிய கால்நடை பூங்காவானது கால்நடை அறிவியல் கல்வி மட்டுமல்லாது விரிவாக்கப் பணிகளையும் பெருமளவில் மேற்கொள்ளும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களையும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களின் ஒருங்கிணைந்த இணைப்பு மையமாகவும் செயல்படும். இங்கு உயர் ரக கலப்பின பசுக்களை உற்பத்தி செய்தல், அதி நவீன ஆராய்ச்சி கூடங்கள் அமைத்தல், கால்நடைகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கான (Maintanence) ஆய்வுகளையும், கருவிகளையும் மேம்படுத்துதல், கால்நடை அறிவியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு வெளிநாட்டுக்கு இணையான கல்வியை வழங்குதல் உள்பட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த கால்நடை பூங்கா வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
தற்போது சத்தியமங்கலத்தில் உள்ள காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம் மற்றும், உம்பளச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு, இனப்பெருக்கப் பண்ணையும் கால்நடை பூங்காவில் அமைய உள்ளது. மேலும், செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கோழி இனங்களின் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் நேரடியாகக் கலப்பின ரக மாடுகளையும், கன்றுகளையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த பூங்காவிலேயே ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த ஆராய்ச்சிகளும், பயிற்சி (Training) வழங்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, தனித்தனியே மிகப்பெரிய அளவில் கட்டட வசதிகளும், ஆய்வக வசதிகளும் உள்ளன.
பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைப் பாதுகாத்துப் பதப்படுத்துதல், அவற்றிலிருந்து உபபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளத் தனிப்பிரிவுகள் உள்ளன.
தற்போது தொடங்கப்பட்டுள்ள கால்நடை கல்லூரிக்கு தேவையான நவீன வகுப்பறைகள், நூலகம், எட்டு கல்விசார் கட்டிடங்கள், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை சிகிச்சையியல் துறை, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, கால்நடை மருந்தியல் துறை, கால்நடை உணவியல் துறை, இனவிருத்தி துறை, நுண்ணுயிரியல்துறை, விரிவாக்க மையம், மாணவர் விடுதி, ஆசிரியர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, பால் வள அறிவியல் வளாகம், இறைச்சி அறிவியல் வளாகம், கால்நடை பண்ணை வளாகம், உணவகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பார்க்கையில் இந்த கால்நடை பூங்காவானது ஒருங்கிணைந்த மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகவே காட்சியளிக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க