பூச்சி மருந்துகளின் நச்சுத் தன்மைக்கு தேனீக்கள் பலியாவது அதிகரித்து வரும் காலம் இது. ஆனால், தேனீக்களைக் (Honey Bees) கொண்டே இயற்கைப் பூச்சி மருந்துகளை பயிர்களின் மேல் தெளிக்க முடியும் என்பதை கனடாவிலுள்ள, 'பீ வெக்டார் டெக்னாலஜி'யின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இயற்கை பூச்சி மருந்து (Natural pesticides)
பயிர்களுக்கு நடுவே தேன் சேகரிக்கவும், மகரந்த சேர்க்கைக்காகவும் வைக்கப்படும் தேனீப் பெட்டிகளை தந்திரமாக விஞ்ஞானிகள் (Scientists) பயன்படுத்துகின்றனர். தேனீக்கள் வந்து செல்வதற்காக பெட்டியில் இருக்கும் துளையில் இயற்கை பூஞ்சைக் கொல்லி மருந்தை வைத்து விட்டால், அதை தேனீக்கள் உடலில் பூசியபடி பறந்து செல்லும். அவை தேன் பருக பயிர்களின் பூக்களின் மேல் அமர்கையில், இயற்கை பூஞ்சைக் கொல்லித் துகள்கள் உதிர்ந்து பூசிக்கொள்ளும். இதனால் பயிரின் பூக்களில் பூஞ்சை உருவாகாமல் தடுக்கப்படும்.
தேனீ மருந்து தெளிப்பு
இதே முறையில் தேனீக்களுக்கு கெடுதல் தராத, வேறு வகை இயற்கைப் பூச்சி மருந்து பொடிகளையும் கலந்து தேன் கூட்டு வாயிலில் வைக்க முடியும். பூச்சி மருந்துகளை பொதுவாக பயிர்கள், செடி கொடிகளின் எல்லா பகுதியின் மீதும் தெளிப்பது தான் நடைமுறை. இதனால் தாவரம் முழுதும் நச்சுச் தன்னை படுவதோடு, விவசாயிகளுக்கு இடுபொருள் (Inputs) செலவும் விரயமாகிறது. ஆனால், தேனீக்கள் பூக்கள் மீது மட்டுமே அமரக்கூடியவை.
இதனால், விளைச்சலுக்கு எது தேவையோ அதன் மீது மட்டும் பூச்சி மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை தேனீக்களால் செலுத்த முடியும். தற்போது சோதனையில் இருக்கும் தேனீ மருந்து தெளிப்பு தொழில்நுட்பம் விரைவில் பரவும் என்று நம்பலாம்.
மேலும் படிக்க