பொதுமக்களிடம் வீட்டுத் தோட்டம் மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில், நீலகிரி தோட்டக் கலைத்துறை சார்பில் மலிவு விலையில் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுக்க வளரக்கூடிய காய்கறிகளில் ஒன்றான பெர்னில் எனப்படும் சாதாரண அவரை (perennial beans) விதையைக் களிமண் மற்றும் இயற்கை உரம் கலந்து விதைப் பந்துகளாக (Seed Balls) உருவாக்கி 2 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த முயற்சி தொடங்கியதை அடுத்த பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாகத் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இந்த ஆண்டும் 15 ஆயிரம் அவரை விதைப் பந்துகளை உற்பத்தி செய்யத் தோட்டக்கலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து உதகை அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வீட்டின் சிறிய இடத்தில் கூட மண் சட்டிகளில் காய்கறி விதைப் பந்துகளை வைத்துப் பயிர் செய்து காய்கறிகளை விளைவிக்கலாம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் மக்கும் குப்பை, மாட்டுச்சாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கியமான காய்கறிகளை உண்ணலாம்.
மக்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளை இயற்கையாக வளர்த்துச் சாப்பிடும் போது இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும் அவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்
இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர் கேட்டுக் கொண்டால் தக்காளி, வெண்டை, கத்தரி ஆகியவற்றின் விதைப் பந்துகளைத் தயாரித்துக் கொடுப்போம், பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 4 இடங்களில் விதைப் பந்தினை விற்பனைக்கு வைத்துள்ளோம். மக்களின் ஆதரவைப் பொறுத்து உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
வீடுகளில், தொட்டிகளில் வளர்த்து இயற்கை காய்கறிகளை பயிர் செய்ய விரும்புவோர் 94864 12544 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு விதைகளைப் பெறலாம் என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
வரும் நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு!
பால் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம் - விவசாயிகள் கவலை