பூச்சிகளை கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட அளவு கூடும் போது அவை பயிர்களில் தங்கி விடுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப்பதால் மூலிகை பூச்சிவிரட்டிகளை தயாரிப்பதே சிறந்தது. தொட்டால் துர்நாற்றம் வீசும் ஊமத்தை, பீநாரி, சீதா மர இலைகள், தின்றால் கசக்கும் வேம்பு, சோற்று கற்றாழை ரகங்கள், ஒடித்தால் பால் வரும் எருக்கு, பப்பாளி, ஆடாதொடை, ஆடு தீண்டாப்பாளை, தும்பை, துளசி, பெரண்டை, புங்கன், நொச்சி, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள்செடி, நித்தியகல்யாணி செடிகளை கொண்டு பூச்சிவிரட்டி தயாரிக்கலாம்.
பூச்சிவிரட்டி (Insect Repellent)
மேற்கூறியவற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளுடன் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும். ஒரு சாக்கு இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி இலைகள் மூழ்கும் அளவுக்கு மண் அல்லது சிமென்ட் தொட்டியில் கோமியம் சேர்த்து ஊறவைக்க வேண்டும். 10 நாட்களில் தாங்க முடியாத நெடி ஏற்பட்டால் தயாராகி விட்டதென அர்த்தம். ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட செடிகளின் இலை, காய்களை தின்னும் தாய் பூச்சிகள் இந்த கரைசலால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகும். பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது. வயல், வேலியோரம் வளர்ந்திருக்கும் இலை, தழைகளை கொண்டு செலவில்லாமல் தயாரிக்கலாம். காய்கறி, பழங்களில் நச்சுத்தன்மை ஏறாது. சுற்றுப்புறத்திற்கு கேடில்லை. ஆடு, மாடுகளுக்கு சேதமில்லை. பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை நன்மை செய்யும் பூச்சிகள். அதேபோல நுாற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் பூச்சிகளை பிடித்து உண்கின்றன. இவை நிற்பதற்கு அல்லது அமர்வதற்கு வசதியாக பயிர்களின் நடுவே குச்சி அல்லது தென்னை ஓலை அடிமட்டையை நட்டு வைக்கலாம். செவ்வந்திப் பூ செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்தால் தீங்கு செய்யும் பூச்சிகளை விரட்டலாம். வெள்ளரி, தட்டை பயிறுகளை வரப்பு பயிராக நட்டால் பூச்சிகளை கவர்ந்து இழுத்து மற்ற பயிர்களை பாதுகாக்கும்.
தொடர்ந்து இயற்கை வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் இப்படி செய்தால் மூலிகை பூச்சிவிரட்டி கூட தேவைப்படாது.
கண்ணன், விதைச்சான்று அலுவலர்
மணிகண்டன், அங்ககச்சான்று ஆய்வாளர்
சிங்காரலீனா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர்,
மதுரை.
97883 56517
மேலும் படிக்க