நாற்றுக்களின் பராமரிப்பை பொறுத்தே, பயிர் மகசூல் அமைகிறது. அதற்கு வீரியம் மிகுந்த நெல் நாற்றுகளை உற்பத்தி செய்வது மிகவும் இன்றியமையாதது. வளமான நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்கு பின்வரும் யுக்திகளைப் பயன்படுத்துவது நல்லது. வளமான நாற்றுக்களைப் பெற தரமான நெல் விதையைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு வருடத்திற்கு மேல் சேமிக்கப்பட்ட விதைகளை உபயோகிக்கக் கூடாது.
தேர்வு செய்த இரகத்தின் விதைகள் சான்றிதழ் பெற்றதாகவும் அதிக முளைப்புத் திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியமாகும்.
தரம் உயர்த்துதல் (Quality develop)
உப்பு நீர்க் கரைசலைப் பயன்படுத்தி தரமான விதைகளைப் பிரித்தெடுப்பது, வீரியமான நாற்றுக்களைப் பெற இயலும்.
ஈர விதை நேர்த்தி (Seed)
கார்பன்டசிம் (அ) டிரைகோசோல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டு 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் விதைகளை 16-18 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டி பின்பு விதைக்கலாம்.
நாற்றங்கால்
ஒரு ஏக்கர் நடவுக்கு 8 சென்ட் நிலத்தை தேர்வு செய்து அடியுரமாக 400 கிலோ மக்கிய தொழு உரம் இட்டு நன்றாகக் கலக்க வேண்டும். சேற்றுழவு செய்த பிறகு ஒரு சென்ட் அளவில் சமன் செய்யப்பட்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து பாத்திகளை சுற்றிலும் 30 செ.மீ. அகலமுள்ள சிறுவடிகால் அமைக்க வேண்டும்.
விதைப்பு (Sowing)
மேட்டுப் பாத்தி நாற்றங்காலில் சிறதளவு நீரைத் தேக்கி பின்பு முளை கட்டிய விதைகளை விதைக்க வேண்டும். குறுகிய கால இரகமாக இருந்தால் சென்டிற்கு 4 கிலோ விதையும், மத்திய கால இரகமாக இருந்தால் சென்டிற்கு 3 கிலோ விதையும் வீரிய ஒட்டு நெல்லாக இருந்தால் சென்டிற்கு 1 கிலோ விதை என்ற அளவில் விதைப்பு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம் (Water Management)
விதைத்த 18 – 24 மணி நேரத்தில் சிறிதும் நீர் தேங்காமல் வடித்து விடவேண்டும். ஆனால் ஈரம் காயாமல் இருப்பதும் அவசியம். விதைத்த ஐந்தாம் நாளிலிருந்து நீரின் அளவைக் கூட்டி நாற்றின் வளர்ச்சிக்குத் தக்கவாறு அதாவது 1.5 – 2.5 செ.மீ. உயரத்திற்கு நீர் கட்ட வேண்டும்.
உரம் தெளித்தல் (Fertilizers)
நாற்றுக்களின் வளர்ச்சிக் குன்றி, மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் யூரியாக் கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் என்ற அளவில் கலந்து இலைவழி மூலமாக கலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தெளிக்க வேண்டும்.
தகவல்
ஆ.சதிஷ்குமார் மற்றும் செ.ஆதித்யன்,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை
மேலும் படிக்க...
சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!