கால்நடை வளர்ப்பில் அசோலாவின் பங்கு முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில், அதன் இயல்புகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெ.கருணாகரன், சூ.அருள்செல்வி, மு.சபாபதி, சி.பிரபாகரன், ம.ராஜேஷ், வெ.தனுஷ்கோடி மற்றும் து.பெரியார் ராமசாமி ஆகியோர் ஒருங்கிணைந்து பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
அசோலா வளர்வது வருடம் முழுவதும் இயல்பாக நடக்கக்கூடிய செயல் என்றாலும் கீழ்கண்ட சூழ்நிலைகளில் அசோலா நன்கு வளர்கிறது.
சூரிய ஒளி:
- பச்சையம் தயாரிப்பதற்கு சூரிய ஒளி தேவை என்றாலும் நேரடி சூரியக் கதிர் பாயாமல் நிழல் வலைக்குள் ஊடுறுவிச் செல்லும் குறைவான வெளிச்சத்தில் நன்கு வளரும்.
- பொதுவாக அசோலாவானது 25-50% வெளிச்சத்தில் நன்கு வளரும்.
- மிக அதிக சூரிய ஒளி அதனுடைய மென்மையான பகுதிக்கு சேதமுண்டாக்கும்.
- மிக அதிக சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் அசோலா பழுப்பு, சிவப்பு நிறமாக மாறி இறந்துவிடும்.
- அதே போல மிகவும் இருட்டு இருந்து போதுமான சூரிய வெளிச்சமில்லை என்றாலும் வளர்ச்சியானது தடைபட்டு குறைய வாய்ப்புள்ளது.
தண்ணீர்:
- அசோலா வளர்ப்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீரிலில்லாமல் அசோலாவை வளர்க்க இயலாது. எப்போதும் தண்ணீரின் அளவை நிலையாக வைத்திருக்க வேண்டும்.
- நான்கு அங்குல அளவு உயரத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தண்ணீரின் மட்டம் குறைவாக இருந்தால் வேர்கள் குளத்தினை தொட்டால் அசோலாவில் வளர்ச்சி குன்றும்.
வெப்ப அளவு:
- 200C – 300C அளவு வெப்பநிலை மட்டுமே அசோலாவிற்கு ஏற்றது.
- 370C-க்கு மேல் வெப்பத்தின் அளவு அதிகரித்தால் அசோலாவின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும்.
- 200C -க்கும் குறைவான வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
காற்றின் ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதமானது 85 – 90% இருக்க வேண்டும். காற்றின் ஈரப்பதமானது 60%-க்கும் கீழ் வந்துவிட்டால் அசோலா காய்ந்துவிடும்.
தண்ணீரின் கார அமில தன்மை:
- தண்ணீரின் கார அமில தன்மை pH 5 -7 வரை இருக்க வேண்டும்.
- உப்பு நீரில் அசோலாவின் வளர்ச்சி தடைபடும்.
- அதிகப்படியான அமிலத்தன்மையும், அதேபோல் காரத்தன்மையுள்ள தண்ணீரில் அசோலாவை வளர்க்க முடியாது.
காற்று:
- வேகமாக வீசும் காற்று மறைமுகமாக அசோலா வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கின்றது. காற்று வீசும்போது மிதக்கும் அசோலா எதிர்திசையில் சென்று மொத்தமாக ஒதுங்கி அங்கு நெருக்கம் உண்டாகிறது. அதிக நெருக்கடியால் காற்றோட்டம் குன்றி வளர்ச்சி குறைகின்றது.
- அதிக வேகமான காற்று அசோலாவில் சிதைவுகளை ஏற்படுத்துகின்றது.
சத்துகள்:
- அசோலா தனக்குத் தேவையான சத்துக்களை தண்ணீரில் இருந்து எடுத்துக் கொள்கின்றது. அசோலா வளர்வதற்கு அனைத்து வகையான சத்துக்களும் தேவைப்பட்டாலும் பாஸ்பரஸ் எனும் மணிச்சத்து அதிக அளவில் தேவைப்படுகின்றது.
- தண்ணீரில் கரையும் பாஸ்பரஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் 20 ppm எனும் அளவிற்கு மணிச்சத்து (பாஸ்பரஸ்) எப்போதும் இருக்க வேண்டும்.
நுண் ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும் துரிதப்படுத்தும். கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுக்கக் கூடிய இந்த அசோலாவை நமது தேவைக்கு எவ்வாறு வளர்ப்பது என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.
Read more:
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?
மருந்தாளுநர் டூ முழு நேர இயற்கை விவசாயம்: பல பயிர் சாகுபடியில் அசத்தும் கென்னடி