Farm Info

Sunday, 04 October 2020 05:24 PM , by: KJ Staff

வாழை விவசாயிகள் சந்திக்கும் மிகப் பெரும் பிரச்சனை தான், வாழையில் ஏற்படும் வாடல் நோயின் (Blight) தாக்குதல். வாழைப்பயிரில் வாடல்நோய்த் தாக்குதலால் 10 முதல் 50 சதவீத விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால், நட்டத்தை சந்திக்கும் நிலைக்கு, விவசாயிகள் ஆளாகின்றனர். வாடல் நோயின் அறிகுறிகளை கண்டறிந்து, அதன் விளைவுகளை தடுக்க, தக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். வாடல் நோயைக் கட்டுப்படுத்தி விட்டால், விளைச்சல் அதிகரித்து, நல்ல இலாபம் பெறலாம்.

வாடல்நோயின் அறிகுறி (Symptoms of Blight):

வாடல்நோய் மண் மற்றும் கிழங்கு மூலம் பரவுகிறது. அடிச்சுற்று இலைகளின் விளிம்புகள், முதலில் மஞ்சளாக மாறி மையப்பகுதி வரை நீளும். விளிம்புகள் வாடி காய்ந்து விடும். நோய் தீவிரமடையும் போது, அடித்தண்டு பிளந்துவிடும். வெட்டிப்பார்த்தால் நீர், ஊட்டச்சத்துக்களை கடத்தும் திசுக்கள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறியிருக்கும். திசுக்களில், பூஞ்சாண இழைகள் படர்ந்து சாற்றுக்குழாய் அடைபட்டு மரம் வாடத்தொடங்கும்.

நுாற்புழுக்களால் (Nematodes) தாக்குதல்

துளைப்பான், வேர்அழுகல், வேர்முடிச்சு மற்றும் சுருள் வடிவ நுாற்புழுக்களின் தாக்குதலால் வாழை இலைகளின் எண்ணிக்கை குறைந்தும், மஞ்சள் நிறமடைந்தும் காணப்படும். மரங்கள் வளர்ச்சி குன்றி விடும். வேர்கள் கருப்பு அல்லது கருஞ்சிவப்பு நிற அழுகலோடும் வேர் முடிச்சுகளோடும் காணப்படும். இதனால், மரங்களின் வேர்கள் பிடிப்பின்றி மண்ணில் எளிதில் சாய்ந்து விடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions):

வாழைக்கு அடுத்ததாக, நெல் அல்லது கரும்பு பயிரிட்டால் பூஞ்சாணம் வளர்வதைத் தவிர்க்கலாம்.
ஏக்கருக்கு 50 கிலோ தொழுஉரம், வேப்பம்புண்ணாக்குடன், இரண்டரை கிலோ சூடோமோனஸ் புளோரசன்ஸ் (Pseudomonas fluorescens) எதிர் நுண்ணுயிரியை, கலந்து அடியுரமாக இடலாம். நடவிற்கு முன், கிழங்கின் மேலுள்ள பழைய வேர்ப்பகுதி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற வேண்டும். லிட்டருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் (Carbendazim) கலந்து, கிழங்குப்பகுதியை 20 நிமிடங்கள் நனைத்து களிமண்ணில் தேய்க்க வேண்டும். ஒரு கிழங்கிற்கு 40 கிராம் கார்போபியூரான் (Carbopuran) குருணை மருந்து கலந்து, துாவ வேண்டும் அல்லது லிட்டருக்கு 20 மில்லி கார்பன்டசிம் கரைசலை சிறிய ஊசி வழியாக கிழங்கின் பக்கவாட்டில் செலுத்த வேண்டும்.

வாடல் நோயைத் தவிர்க்கும் முறைகள் (Ways to prevent Blight):

தொடர்ந்து ஒரே பயிராக வாழை சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். மாற்றுப் பயிராக தானியங்கள், பருத்தியை (Cotton) சாகுபடி செய்தால் நுாற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். வாழைக்கன்று பயிரிட்ட 45 நாட்கள் கழித்து, சணக்கை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை (Green manure) பயிரிட வேண்டும்.
பூப்பதற்கு முன்பாக, அவற்றைப் பறித்து வாழைப் பயிர்களுக்கு நடுவில் வைத்து மண் அணைத்தால் நுாற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். வாழைக்கன்று கிழங்கின் வேர்ப் பகுதியில் அழுகியுள்ள பகுதியை 3 செ.மீ. (3cm) ஆழம் வரை, வெட்டி விட்டால் அவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம். வாடல் நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட, வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது சாலச் சிறந்தது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க..

கோவையில் சாகுபடி செய்யப்படும், குஜராத்தின் டிராகன் பழம்! குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!

வெங்காயத்தைப் பாதுகாக்கும், பழங்கால வெங்காயப் படல் முறையில், விற்பனையும், விதை சேமிப்பும்!

வாழையின் விலை இனி உயருமா? குறையுமா? ஆய்வில் வேளாண் பல்கலைக்கழகம் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)