தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதேபோல், மோசடி செய்து பணத்தைப் பெற்றவர்களிடம் இருந்து தவணைத்தொகையைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பிஎம் கிசான்
நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைத்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியத் திட்டம்தான்
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டம்.
2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
12ஆவது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இதைத்தொடர்ந்து, 12ஆவது தவணைப் பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல, கணவன் - மனைவி இருவருமே நிதியுதவி பெறுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைப்படி இது தவறாகும். இதுபோன்று தவறான முறையில் நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தகுதி
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைத்துவிடாது. அதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
யாருக்கெல்லாம் கிடைக்காது?
நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. முந்தைய ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியாது.
தயாராகிறது பட்டியல்
பிஎம் கிசான் திட்டம் என்பது உண்மையில் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டமாகும். ஆனால் நல்ல வசதி படைத்தவர்களும் அரசு வேலை பார்ப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெறுவது தெரியவந்துள்ளது. இதனால் தகுதியற்றவர்களை இத்திட்டத்தில் இருந்து நீக்கவும், அவர்கள் பெற்ற நிதியுதவியை திரும்ப வசூலிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தகுதியற்றவர்களின் பெயர் திட்டத்துக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...