தமிழகத்தில் கண்வலிக்கிழங்கு அதிக பரப்பளவில் சாகுபடி (Cultivation) செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மாநில மலர். ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனுார், திண்டுக்கல், கரூரில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது. இதன் கிழங்கு மற்றும் விதைகள் பயிர் பெருக்கத்திற்கு பயன்படுகின்றன. விதைகள் வணிகரீதியாக தொழிற்சாலையில் மூலப்பொருள் பிரித்தெடுக்க பயன்படுகிறது. விதையிலிருந்து கோல்சிசின் மற்றும் கோல்சிகோசைடு (Colchicine and colchicine) பிரித்தெடுக்கப் படுகின்றன. இது 'கவுட்' எனப்படும் மூட்டுவலிக்கு தீர்வாக பயன்படுகிறது.
தொழில்நுட்ப உதவி:
கண்வலிக்கிழங்கு ஜூலை, ஆகஸ்டில் நடவு செய்தால் டிசம்பர், ஜனவரியில் அறுவடைக்கு (Harvest) தயாராகி விடும். செடிகள் படர்வதற்கு பந்தல் தேவை. காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். விதைக்கிழங்கு வாங்குவதும், பந்தல் அமைப்பதும் தான் முக்கியமான செலவு. கோவை வேளாண் பல்கலை விதையிலிருந்து, கிழங்கு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் வெளியிடப்பட்டுள்ளதால், விதைக் கிழங்கிற்காக ஆகும் செலவை குறைக்கலாம். தரமான விதைக்கிழங்குகள் பெறலாம். இதில் பயிர் பாதுகாப்பு (Crop protection) முக்கியம். விதைக்கிழங்கை நேர்த்தி செய்வதோடு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம். முதலாமாண்டில் சாகுபடி செலவு அதிகமாக இருக்கும். 2வது, 3வது ஆண்டுகளில் நிகர லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பயிரிடுவது அவசியம்.
மருந்துக் கூர்க்கன்
மற்றொரு வணிரீதியான மூலிகைப் பயிர் மருந்துக் கூர்க்கன். 2013ல் பல்கலை கோ 1 என்ற ரகத்தை வெளியிட்டுள்ளது. நுனித்தண்டுகள் மூலம் பயிர் செய்யலாம். ஆறுமாத பயிர் என்பதால் ஜூன் - ஆகஸ்டுக்குள் நடவு (Planting) செய்யலாம். இதன் வேர்கள் உடல் எடை குறைப்பு, ரத்த அழுத்த நோய்க்கு மருந்தாகின்றன. வேரில் போர்ஸ்கோலின் (Porscolin) என்ற வேதி மூலப்பொருள் உள்ளது. சேலம், திருவண்ணாமலையில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நோய் மேலாண்மை (Disease management) அவசியம் என்பதால் நடவிற்கு முன் நுனித்தண்டுகளை நேர்த்தி செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துவதோடு சந்தை நிலவரம் அறிந்து மூலிகைப்பயிர் பயிரிடுவதும் அவசியம்.
நளினா,
இணைப்பேராசிரியர் ராஜாமணி,
துறைத்தலைவர் மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறை,
தோட்டக்கலை கல்லூாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
கோவை, med@tnau.ac.in
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெல்மணிகளை போரடிக்க மாடுகளுக்கு பதில் யானை! மதுரையில் பாரம்பரிய முறை மீட்டெடுப்பு!
பருத்தி, தேங்காய்க்கு மறைமுக ஏலம்! பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!