தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. மரவள்ளி பூஸ்டர், TNAU பருத்தி பிளஸ், மெத்தலோ பாக்டீரியா இவற்றின் பயன் என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.
மரவள்ளி பூஸ்டர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2020 -ல் வெளியிடப்பட்டது. (மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஏத்தாபூர்). இவை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிலோ சாணத்தை 200 லிட்டர் நீரில் கலந்து வடித்து தெளிக்க பயன்படுத்தவும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேப்பம்புண்ணாக்கு, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், ஊட்டக்கலவைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பினை வழங்குகிறது. இதனை பயன்படுத்துவதால் மரவள்ளி கிழங்குகளில் மாவுச்சத்து அளவு அதிகரிக்கும். கசாவா மொசைக் நோய் தாக்கம் குறையும். மகசூல் 20-25% வரை அதிகரிக்கும்.
TNAU பருத்தி பிளஸ்:
தட்பவெப்பநிலை மாற்றத்தினாலும், மண்ணின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் பயிர் வினையியல் குறைபாடுகள் பருத்தியில் தோன்றுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்காக “TNAU பருத்தி பிளஸ்” என்ற பூஸ்டரை பயன்படுத்தலாம்.
பயன்கள்: பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து, சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. விளைச்சல் 18% வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை:
அளவு: ஏக்கருக்கு 5 கிலோ. தெளிப்பு திரவம்: 200 லிட்டர். தெளிக்கும் பருவம்: 2.5 கிலோ பூக்கும் பருவத்தில், 2.5 கிலோ காய் பிடிக்கும் பருவத்தில். தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மெத்தலோ பாக்டீரியா:
பயிர்கள் கருகுவதை தடுக்க வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மெத்தலோ பாக்டீரியா என்னும் திரவ நுண்ணுயிரை கண்டுபிடித்துள்ளனர். 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி திரவ நுண்ணுயிர் உரம் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிர்களின் மீது நன்றாக (நனையும்படி) படும்படி தெளிக்க வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்தால் 10 – 15 நாட்கள் வரை தண்ணீரின்றி வறட்சியை தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது.
இவற்றை வாங்கி பயன்படுத்திய விவசாயி ஒருவரின் அனுபவம்: பருத்தி, தக்காளி, கத்தரி போன்ற பயிர்கள் பூ மற்றும் காய் பிடிக்கும் சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடி இருக்கும் பயிர்களுக்கு தெளித்து பார்த்தில் பயிர்கள் நன்கு செழித்து கரும் பச்சை நிறத்தில் உள்ளது.
மா, எலுமிச்சை, கொய்யா, வாழை போன்ற பயிர்களுக்கு தெளித்து பார்த்ததில் பூ,பிஞ்சு கொட்டுவதில்லை, கருகல் வருவதில்லை.மேலும் காய்கள் நல்ல சைனிங்குடன் உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அனைத்து பயிர்களுக்கும் இவற்றை தெளிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெளிவுப்பெறுமாறு விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் வைக்கப்படுகிறது.
மேலும் காண்க:
சேலம் மாவட்ட அங்கக விவசாயிகளின் கவனத்திற்கு!
அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு