தமிழகத்தில் அதிக பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றைத் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாண்டால் மகசூல் (Yield) இழப்பின்றி வெற்றி பெறலாம்.
அழுகல் நோய்
கத்தரியில் நாற்றுப்பருவத்தில் அழுகல் நோயால் தண்டு அழுகி சாய்ந்துவிடுகின்றன. வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையிலும் விதையளவை கூட்டி, விதைப்பு செய்யும் போது இந்நோய் அதிகமாக தோன்றுகிறது. மண் மூலமாகப் பரவும் இந்த நோய் விதைகளை அழுகச் செய்து முளைக்க விடுவதில்லை.
வாடல் நோய்
வாடல் நோய் தாக்கினால், செடிகளின் அடி இலைகள் பழுத்தும் துவண்டும் தொங்கிக் கொண்டிருக்கும். இறுதியில் இலைகள் காய்ந்து செடி மடிந்துவிடும்.
இலைக்கருகல், பழ அழுகல் நோய் போமாப்சிஸ் வெக்சன்ஸ் எனும் பூஞ்சணத்தால் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள பழங்கள் அழுகி கருத்துவிடும். விதை (Seed) மூலமாகவும் மழைத்துளிகள் மூலமாகவும் பரவுகிறது.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயில் பலபுள்ளிகள் ஒன்று சேர்வதால், பாதிக்கப்பட்ட இலைகள் கருகி காய்ந்துவிடுகின்றன. காய்கள் சிறுத்துக் காணப்படுகின்றன. கத்தரி தோட்டத்தில் வேர் முடிச்சு நூற்புழுவின் தாக்குதல் இருந்தால் பாக்டீரியா வாடல் நோய் உண்டாகும் அளவு அதிகரிக்கும்.
தேமல் நோயால் தாக்கப்பட்ட செடி குட்டையாயிருக்கும். செடியின் உற்பத்தித்திறன் குறையும். ஓரிரு சிறிய காய்கள் மட்டுமே உண்டாகியிருக்கும். இது ஒரு நச்சுயிரி.
சிற்றிலை நோய் நுண்ணுயிரியால் இலைத் தத்துப் பூச்சியின் மூலமாகப்பரவுகிறது. நோயுற்ற செடி மலடாகின்றன. நோய் எதிர்ப்புத்திறன் (Immunity) வாய்ந்த ரகங்களைப் பயிரிடுவது சிறந்த கட்டுப்பாட்டு முறை. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடர்மா பூஞ்சாணம் அல்லது 10 கிராம் பேசில்லஸ் பாக்டீரியா கலவையை கலந்து விதைத்தால் நோய் தாக்காது.
கட்டுப்படுத்தும் முறை
பரிந்துரைக்கும் அளவில் விதைகளை மேட்டுப்பாத்தியில் நாற்றுவிட்டு அளவாக நீர்ப்பாய்ச்சினால் சேதத்தைக் குறைக்கலாம். ரசாயன முறையில் இதனைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் வீதம் தாமிர ஆக்சிக்குளோரைடு (Oxi-Chloride) பூசணக் கொல்லியை கரைத்து பூவாளியால் தெளிக்கலாம். வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சியில் (Crop Rotation) நெல், கம்பு, கேழ்வரகு மற்றும் சோளத்தை சேர்த்து பயிரிடலாம். ஆழமாக கோடை உழவு செய்வதன் மூலம் அடியில் தங்கியிருக்கும் புழு, பூச்சி, நச்சுயிரிகளை வெளியேற்றி அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி அழிக்கலாம். ஒரு எக்டருக்கு 2.5 கிலோ பேசில்லஸ் பாக்டீரிய கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு (அ) வேப்பம் புண்ணாக்குடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இட வேண்டும்.
இலைப்புள்ளி, இலைக்கருகல், பழ அழுகல் நோய், வாடல் நோய்களால் பாதிக்கப்பட்ட செடிப் பகுதியை பயிர்க்காலம் முடிந்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும். நல்ல செடிகளை காப்பாற்ற அவற்றின் வேர்ப்பகுதியில் ஒரு கிராம் கார்பன்டசிம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து செடியின் மண் நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவில் தழைச்சத்தை இடுவதால் வாடல் நோய் குறையும். இலைப்புள்ளி நோய்கள் தீவிரமாக இருந்தால் கார்டிபன்டசிம் 0.1 சதவீத கரைசல், அல்லது மேன்கோசெப் 0.2 சதவீத கரைசலை தெளிக்க வேண்டும்.
சிற்றிலை நோயைப் பரப்பும் இலைதத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது டைமீதோயேட் ஆகிய பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி வீதம் கலந்து பயிரின் மீது தெளிக்க வேண்டும்.
யமுனாராணி
உதவி பேராசிரியர் கல்யாணசுந்தரம்
இணை பேராசிரியர் பயிர் பாதுகாப்புத்துறை வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை,
0437 - 229 1200
மேலும் படிக்க
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!
தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை செயலர் உத்தரவு