வடகிழக்கு பருவ மழையை முழுமையாக அறுவடை (Harvest) செய்யும் வகையில், கிராமங்களில், 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. அதன்படி, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீரை (Ground Water) பாதுகாக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள, 13 ஊராட்சிகளிலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துவக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலர் டாக்டர் கோபாலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், பி.டி.ஓ., மீனாட்சி, விஜயகுமார் ஆகியோர் தலைமையில், கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், துணை பி.டி.ஓ.,களுக்கு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.
இலக்கை எட்ட தீவிர முனைப்பு
இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் கூறியதாவது: தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சிகள் தோறும், மழைநீர் சேகரிப்பு (Rainwater Harvest) மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவங்கியுள்ளது.
1,000 பண்ணைக்குட்டைகள்
ஊராட்சிகளில் தலா, ஐந்து பண்ணைக்குட்டை, குளம், குட்டை மற்றும் பொது இடங்களில், சிறு குழிகள் அமைத்து மழைநீரை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்குள், 265 ஊராட்சிகளில், 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்களது நிலத்தில், ஐந்து மீட்டர் நீளம் மற்றும் அகலம், 1.50 மீட்டர் ஆழத்தில், பண்ணை குட்டை அமைக்க, ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மழைநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் தேக்குவதன் மூலம், நிலத்தடி நீராதாரம் செறிவூட்டப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஊராட்சிகளில், தலா, ஐந்து பண்ணைக்குட்டை, குளம், குட்டை மற்றும் பொது இடங்களில், சிறுகுழிகள் அமைத்து மழைநீரைசேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூகுள் மீட்டிங் நடத்தி ஆலோசனை
வடகிழக்கு பருவத்தில், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என, கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து ஊராட்சி தலைவர்களுடன்,'கூகுள் மீட்டிங்' வாயிலாக, இதுகுறித்து நேற்று ஆலோசித்தார். கிராமங்களில், மழைநீரை முழுமையாக அறுவடை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க