இலைகள் அகலமாக உள்ள ஆமணக்கு, துவரை, தட்டைப் பயிர்களை பூச்சிகள் முதலில் தாக்கும். எனவே பயிர் பாதுகாப்புக்காக நிலக்கடலை சாகுபடியின் (Groundnut Cultivation) போது இவற்றை ஊடுபயிராக விதைக்கலாம். நிலக்கடலையில் டி.எம்.வி. 7, 13, கோ 7, வி.ஆர்.ஐ. 8 தரணி மற்றும் காதிரி 8 போன்ற ரகங்களை தேர்வு செய்து விதைக்கலாம். 70 சதவீதம் முளைப்புத்திறனுள்ள சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்வதே நல்லது
விதையின் பருமன், முளைப்புத்திறன் மற்றும் பயிர் இடைவெளிக்கு ஏற்றவாறு ஒரு ஏக்கருக்கு 50 - 64 கிலோ விதைகள் தேவை. கருவி மூலம் விதைத்தால் ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் என்ற எண்ணிக்கையில் பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
வேர்புழுக்கள்
தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் ஒரு கிலோ விதைக்கு குளோர் பைரிபாஸ் 25 இ.சி. பூச்சிக்கொல்லி 12.5 மில்லி கலந்து விதைத்தால் அவற்றை கட்டுப்படுத்தலாம். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட வேண்டும். விதைத்த பின் 5 கிலோ நிலக்கடலை நுண்ணூட்டு உரம் துாவ வேண்டும்.
நிலக்கடலையில் வேர்முடிச்சுகள் அதிகமாக தழைச்சத்தை நிலைப்படுத்த வேண்டுமெனில் 50 கிலோ விதையுடன் தலா 200 கிராம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவுடன் சாதம் வடித்த கஞ்சியை கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். இதன் மூலம் 10 - 20 சதவீத கூடுதல் மகசூல் (Highly Yield) பெறலாம்.
கலப்பு பயிர் (Inter cropping)
ஆமணக்கு பயிரை வரப்பு பயிராக அல்லது கலப்பு பயிராக சாகுபடி செய்யலாம். மேலும் துவரை, தட்டை பயிறு, பருத்தி பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஐந்து வரிசைக்கு ஒரு வரிசை என்ற அளவில் தட்டைப்பயறு சாகுபடி செய்தால் சிவப்பு கம்பளி பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம். கம்பு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்தால் சுருள் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பயிர் முளைத்த 35 - 45ம் நாள் கைகளால் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். 45 நாட்களுக்கு பின் மண்ணை கிளறினால் நிலக்கடலை உருவாவது பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.
கொத்து ரகத்தில் பயிர் முளைத்த 26 - 34 நாட்களில் பூக்கள் உருவாகும். 70 நாட்களுக்கு மேல் உருவாகும் பூக்கள் காய்களாக மாறாது. 67 சதவீத பூக்கள் மட்டுமே கடலையாக மாற்றமடைகின்றன. மொத்த பூக்களில் 8 - 17 சதவீத பூக்கள் மட்டுமே முற்றிய காய்களாக அறுவடைக்கு கிடைக்கின்றன.
இந்த பருவத்தில் வறட்சி ஏற்படாமலும் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர் முளைத்த 40 - 70 நாட்களுக்குள் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதில் 23 சதவீதம் சுண்ணாம்பு சத்து, 18 சதவீதம் கந்தகசத்து உள்ளதால் திரட்சியான எண்ணெய் சத்து மிகுந்த கடலைகள் பெறலாம்.
-கண்ணையா
வேளாண்மை துணை இயக்குனர்
சீதாலட்சுமி
வேளாண்மை அலுவலர்
உழவர் பயிற்சி நிலையம்
பரமக்குடி, 94420 49291
மேலும் படிக்க
உரத் தட்டுப்பாடு: உரத்தை பங்கிட்டு பயன்படுத்தும் விவசாயிகள்!
பாசன நீரின் தரத்தை கண்டறிந்து பயன்படுத்தினால் அதிக மகசூல் நிச்சயம்!