நிலக்கடலை சாகுபடி தீவிரமெடுத்துள்ள நிலையில் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றினை உபயோகிக்கும் முறை குறித்து அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தனது கருத்தினை கிரிஷிஜாக்ரான் இணையதளத்துடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
கடந்த சில நாட்களாக மழை அங்கும் இங்குமாக பெய்து வருகிறது. ஆடிப்பட்டத்தில் மானாவாரி விதைப்பாக நிலக்கடலை சாகுபடி செய்ய போகும் விவசாயிகளுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தழைச்சத்து( N)
தழைச்சத்தானது பயிர்களின் வளர்ச்சிக்கும் மணி மற்றும் சாம்பல் சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்ளவும் உதவுகின்றன. நிலக்கடலை பயிரானது காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜனை ( 78%) தனது வேரில் உள்ள முடிச்சுகளில் நிலை நிறுத்துவதன் மூலம் அதன் பெரும்பாலான தழைச்சத்து தேவையை பூர்த்தி செய்து கொள்ளுகிறது. இதனால் நம்மால் கொடுக்கப்படும் அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை பயிர்களால் எடுக்க முடியவதில்லை. வீணாக பணம் விரயம் எற்படும்.
தழைச்சத்து உரங்கள் எவை தெரியுமா ?
யூரியா (46%) , அம்மோனியம் சல்பேட் (20%), கால்சியம் அம்மோனியம் நைட்டரேட் ( 26%) ஆகிய உரங்களில் நிலக்கடலை சாகுபடிக்கு 4 கிலோ தழைச்சத்து என்ற அடிப்படையில் 10 கிலோ யூரியா இடலாம்.
மணிச்சத்து(P):
நிலக்கடலை பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் காய்கள் உருவாக்கத்திற்கும், பயிர் முதிர்ச்சியை துரிதப்படுத்தவும் மணிசத்து என்ற பாஸ்பரஸ் உதவுகிறது. மணிச்சத்து தேவையை பூர்த்தி செய்ய சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த படுகிறது. இதில்16% மணிசத்தும், 11% கந்தகமும், 20% கால்சியமும் உள்ளது. மானாவாரி நிலக்கடலைக்கு பொது பரிந்துரையாக ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து என்ற அடிப்படையில் 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் அடியுரமாக இட வேண்டும்.
சாம்பல் சத்து ( K) :
அதிக எடை கொடுக்கவும் நோய் எதிர்ப்புதிறன், வறட்சியை தாங்கும் சக்தியை பயிருக்கு கொடுப்பது சாம்பல் சத்துகளே. பயிருக்கு தேவையான சாம்பல் சத்து தேவையை மூரியேட் ஆப் பொட்டாஷ் பூர்த்தி செய்கிறது. இதில் 60% சாம்பல் சத்து அடங்கியுள்ளது. மானாவாரி நிலக்கடலைக்கான பொது உர பரிந்துரை அடிப்படையில் ஏக்கருக்கு 18 கிலோ சாம்பல் சத்து என்ற அடிப்படையில் 30 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும்.
ஜிப்சம் இடுவதால் மண் இறுக்கம் குறைந்து அதிக எண்ணிக்கையிலான விழுதுகள் இறங்கி நிலக்கடலை எண்ணிக்கை அதிகரிக்க உதவுவதுடன் திரட்சியாக விளைச்சல் பெறுவதற்கும் எண்ணெய் சத்து கிடைப்பதற்கு ஜிப்சம் உதவுகிறது. நிலக்கடலை சாகுபடியில் பொது பரிந்துரையாக ஏக்கர் ஓன்றுக்கு 160 கிலோ பரிந்துரைக்க படுகிறது. ஜிப்சத்தில் 23% கால்சியமும் 18% கந்தக சத்தும் ( SULPHUR) கலந்துள்ளது.
நுண்ணூட்ட கலவை ( M.N MIXTURE):
நுண்ணூட்ட கலவை என்பது தாமிரம்,இரும்பு, மெக்னீசியம், போரான் குளோரின் நிக்கல் போன்ற சத்துகள் அடங்கிய கலவையாகும். கடைசி உழவில் விதைப்பு முன் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட கலவையுடன் 20 கிலோ மணல் கலந்து தூவி விடவேண்டும்.
ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது ஆட்டுகிடை மாட்டுகிடை அமர்த்தி பின் நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் போது தழை, மணி,சாம்பல் சத்துகளை ஈடுவதுடன் ஜிப்சம் நுண்ணூட்ட உரக்கலவையும் இட்டு நிலக்கடலையில் நிறைவான மகசூல் பெறலாம்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மாற்றுக்கருத்துகள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக்கொண்டு விளக்கம் பெறலாம். தொடர்பு எண்: 9443570289
மேலும் காண்க: