தமிழகத்தில் தொடரும் ஊரடங்கால் பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா். கடந்த ஆண்டைத் தொடர்ந்து 2வது ஆண்டாக விற்பனை இல்லாததால் மிகுந்த வேதனையில் தவித்து வருகின்றனர்.
கொரோனா 2வது அலை
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 900 ஏக்கா் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் பகுதிகளில் மட்டுமே பலா சாகுபடி நடைபெறுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு பலா அறுவடையின்போது கொரோனா பொது முடக்கத்தால் விற்பனை சரிந்தது. தற்போது 2வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலா விற்பனை கடுமையாக முடங்கியுள்ளது.
மரங்களிலேயே அழுகும் பலா
தற்போது, கொரோனா பொது முடக்கத்தால் சிறு வியாபாரிகளால் தள்ளுவண்டிகளில் வைத்து பலாப் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பழக் கடைகள் திறக்கப்படாதது, போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பலாப் பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால், மரங்களிலேயே பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஊரிலேயே பலாப் பழங்களை விற்பனைக்கு குவித்துள்ள போதிலும் கொள்முதல் செய்ய ஆளில்லாமல் அவை வீணாகின்றன.
இதுகுறித்து பண்ருட்டியைச் சேர்ந்த பலா விவசாயிகள் கூறுகையில், பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் கொடுத்துச் செல்வாா்கள். இங்கு அறுவடையாகும் பழங்கள் பெரும்பாலும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகும். உள்ளூரிலும் சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையாகும். தற்போது, கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் இ-பதிவு பெற்று வாகனங்களில் வருவதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறாா்கள்.
விலை கிடைக்காமல் தவிக்கும் பலா
வாங்கிச் செல்லும் பழங்களை எங்கு விற்பனை செய்வது என்ற கவலையும் அவா்களிடம் உள்ளது. சில்லறை விற்பனையும் நடைபெறவில்லை. மரங்களில் அறுவடை செய்து எடுத்துச் செல்லும் பழங்களுக்கு வியாபாரிகள் தரத்துக்கேற்ப ரூ.150 முதல் ரூ.200 வரை விலை வழங்கிய நிலையில், தற்போது ரூ.70-க்கு கூட வாங்க முன்வரவில்லை. பழம் பழுத்துவிட்டால் 3 நாள்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது. வெளி மாநிலத்திற்கும் பலா பழங்களை ஏற்மதி ஆகததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும் படிக்க....
கொரோனாவால் வேளாண்துறைக்கு பாதிப்பு இல்லை! - நிதி ஆயோக் உறுப்பினர் கருத்து!!
தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! இன்று முதல் அமலுக்கு வருகிறது!