உண்பார்க்கு உணவுப் பொருட்களை விளைவித்து, தானும் ஒர் உணவாகி (பருகும் நீர்) பயன்படுவது மழையே ஆகும். மழை இல்லையேல் உண்ண உணவும், பருக நீரும் இல்லை. இவையிரண்டும் இல்லையேல் மனித இனம் உயிர் வாழ முடியாது. இதனால் தான் ' நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இதற்காகத்தான் 'மாதம் மும்மாரி' பெய்ய வேண்டும் என்கிறோம். இத்தகைய மழையைப் பெறுவதற்கு அதிக அளவில் மரங்கள் வேண்டும். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை (33 சதவீதம்) மரங்கள் (காடுகள்) இருக்க வேண்டும். இது இயற்கையின் நியதி.
நீர் நிலைகளிலுள்ள தண்ணீர், சூரிய வெப்பத்தால் ஆவியாக, கருக்கொண்டு மேகங்களாக வானத்தில் உலவுகின்றன. இந்த மேகங்கள், குளிர்ந்த காற்றால் மழைத்துளிகளாக மாற்றப்பட்டு மழையாக பொழிகின்றன. இதற்கு தேவைப்படும் குளிர்ந்த காற்றை தருவது மரங்கள் தான். இதனால் தான் "மரம் நடுவோம், மழை பெறுவோம்", என்று குரல் கொடுக்கிறோம்.
குறைந்த நிலத்தில் அதிக மரங்களை அடர்த்தியாக நட்டு, சிறிய காடுகளை உருவாக்க வேண்டும். இத்தகைய மரக்காடுகளால் மட்டுமே மழை மேகங்களை குளிர்வித்து மழைபொழிவைப் பெற்றுத் தரமுடியும். அத்தகைய குட்டி காடுகளை உருவாகித் தரக்கூடிய நல்லதொரு முறை தான் "மியாவாக்கி காடு வளர்ப்பு" (Miyawaki Forest) முறையாகும்.
மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் காடுகளை உருவாக்கத் தேவையானது இரண்டே விஷயம்தான். ஒன்று காலியிடம், இன்னொன்று கழிவுகள், குப்பைகள். இந்த இரண்டும் நம் ஊரில் அதிகம் காண கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினால், எதிர்காலத்தில் மழையீர்ப்பு மையமாக தமிழ்நாடு மாறிவிடும்.
‘‘காடுகளை உருவாக்க வேண்டும்...அதுவும் வேகமாக உருவாக்க வேண்டும். பத்து வருடத்தில் வளரும் மரம், இரண்டே வருடத்தில் வளர வேண்டும். அப்பொழுதுதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை திரும்பும். எல்லாம் சரிதான், பத்து வருடம் ஒரு மரம் வளர்ந்தால் என்ன வளர்ச்சி அடையுமோ, அது இரண்டு வருடத்தில் எப்படி சாத்தியம்?
நிச்சயம் சாத்தியம் எண்று சொல்கிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிராமியாவாக்கி’. ஜப்பான் நாட்டில் இருக்கும் ‘யோகோஹாமா’ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இவர், மரங்கள் அதிவேகமாக வளர ஒர் முறையைக் கண்டுபிடித்துள்ளார். ‘"இடைவெளி இல்லாத அடர்காடு" என்கிற இவரோட தத்துவத்தின் படி, குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நடலாம். இந்த மரங்களும் அதிவேகமாக வளர்வதை நிரூபித்துள்ளார் இந்த விஞ்ஞானி.
இந்த முறையில், இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியோவாக்கி. இவரது இந்த சேவைக்காக 2006 - ம் வருடம், புளூ_பிளானெட்’ விருது கொடுத்துக் கவுரவித்தது, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு.
அது என்ன மியாவாக்கி முறை? அந்த முறையில் எப்படி காடுகளை உருவாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான வின்சென்ட். ‘‘ மியாவாக்கி முறை என்பது கம்மியான இடத்தில், காடுகளை உருவாக்கும் ஒரு முறை. குப்பைகளை கொண்டே குட்டி வனத்தை உருவாக்கும் அற்புதமான தத்துவம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளைப் போட்டு, நெருக்கமாக செடிகளை நடும் முறைக்குப் பேர்தான், மியாவாக்கி. இந்த முறையைக் கண்டுபிடிச்ச விஞ்ஞானியின் பெயரையே இந்த முறைக்கும் வைத்து விட்டார்கள்.
இந்த முறையின் சிறப்பு என்னவென்றால், பத்து வருடத்தில் ஒரு மரம் என்ன வளர்ச்சியை அடையுமோ அந்த வளர்ச்சி இரண்டே வருடத்தில் அடைந்து விடும். மரங்கள் நெருக்கமாக இருப்பதால், ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத் தேடி ஒன்றுக்கொன்று போட்டி போடும் செடிகள் வேகமாக வளரும். ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏகப்பட்ட குப்பைகள் சேருகிறது. அவற்றை, இதுவரைக்கும் முறையாக கையாளவில்லை. காலி இடங்களைத் தேர்வு செய்து, மூன்றடி ஆழத்திற்கு குழி பறித்து. அந்தக் குழிக்குள்ள, நமக்குக் கிடைக்கும் குப்பைகளைக் கொட்டி, குழியை நிரப்ப வேண்டும். மேலே, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம் ஆகியவற்றைப் போட்டு, அதில் செடிகளை நெருக்கமாக நட்டு வைக்க வேண்டும்.
இந்த முறையில், குறிப்பாக நம் நாட்டு மரங்களை நடுவது மிகவும் நல்லது. சிலர், மிக பெரிய செடிகளை நடுவார்கள். பெரிய செடிகளின் வேர், பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுத்தியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது, வேர் நேராக செல்லாது. அதனால், நடுத்தரமான செடிகளை நடுவது நல்லது. இந்த முறையை பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கையில் எடுத்து, காலியான இடங்களிலெல்லாம் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்க வேண்டும்.
இப்படிச் செய்வதால் குப்பைகளையும் முறையாக பயன்படுத்த முடியும், அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும். இந்த முறையில் நடவு செய்ய, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செய்ததும் இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றினால் போதும் அதற்கு பிறகு, தானாக காடு உருவாகிடும்.
மியாவாக்கி முறையால் கிடைக்கும் நன்மைகள் :
குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம்.
நெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறையும்.
காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.
குட்டி வனத்துக்குள் பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவு வாழும். இதனால், உயிர்ச்சூழல் மேம்படும்.
கடற்கரைப் பகுதிகளில் இந்தக் காடுகள் இருந்தால், சுனாமியால் ஏற்படும் பேரிழப்பு தடுக்கப்படும்...
செயல்முறை
600 சதுரடியில் எவ்வாறு மியவாகி முறையில் மரங்களை நடலாம் என்பதை காண்போம் (100 சதுரடியிலும் இது சாத்தியமே)
10 அடி அகலம் 5 அடி ஆழம் மற்றும் 60 நீளத்திற்கு குழி எடுத்தபின் இரண்டு நாட்கள் வெப்பம் தனிய குழியை ஆறவிடவேண்டும் பின்னர் குழி முழுவதும் காய்கறி கழிவுகள் ( உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கும்) வாழை மட்டைகள் மற்றும் இலைகள் , தென்னையோலைகள் மற்றும் மாட்டுச்சாணம் கொண்டு நிரப்பவேண்டும். தென்னையோலைகள் ஒரு லேயர் அதன் மீது மண் ஒரு லேயர் #காய்கறி கழிவுகள் ஒரு லேயர் பின்னர் மண் ஒரு லேயர் வாழைமட்டை மற்றும் இலைகள் ஒரு லேயர் மீண்டும் மண் ஒரு லேயர் என ஒவ்வொரு இயறக்கை கழிவுகளுக்கு மேலும் மண் கொண்டு நிரப்பவேண்டும் குழி முழுவதும் நிரம்பி வழியும் வரை தண்ணீர் விட வேண்டும்.
பின்னர் மண்ணைக்கொண்டு குழியை மூடிவிட வேண்டும். மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு பிறகு ஒரு அடியில் குறைந்தது 5 முதல் 7 வகையான 12 நாட்டு மர கன்றுகளை நெருக்கமாக நடவு செய்தல் வேண்டும். #தேங்காய் நார்களை செடிகளின் இடையே நிரப்பிவிட்டு (ஈரப்பதத்தை நிலைநிறுத்த)வாய்ப்பு இருப்பின் #சொட்டு நீர் அமைந்துவிட்டால் மரங்கள் குறைந்த தண்ணீர் செலவில் வேகமாக வளரும். பஞ்சகாவியம் தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு சேர்ப்பது இன்னும் சிறப்பு
இயற்கையின் படைப்பில் மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் போட்டி, பொறாமை போன்ற குணங்களை விடுத்து ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச்செய்யும் அற்புதத்தை இந்த வகை நடவின் வாயிலாக மரங்கள் வளர வளர அறியலாம், பல வகை மரங்கள் ஒன்றோடு ஒன்று உறவாடி வளரும் காட்சி நிச்சயம் சீதோசனத்தில் மட்டுமல்ல மனித மனங்களிலும் ஒரு மாற்றத்தை ஏற்பதும் என்பதே நிதர்சனம்.
சிறிய இடத்தில பெரிய ஆக்ஸிஜன் தொழிற்ச்சாலையை சிறப்பாக இந்த முறையில் அமைக்கலாம் குறிப்பாக தொழிற்சாலை வளாக ஓரங்களில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரிசர்வ்ட் சைட்கல், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என இவ்வாறான மியவாகி முறை மர நடவு பாதுகாப்பு மற்றும் மாசை குறைப்பதோடு அந்த பகுதியை இயற்கையாகவே வெப்பத்தில் இருந்து பெருமளவு காக்கும், ஏராளமான நுண்ணுயிர் மற்றும் பறவையினங்கள் வாழும் இருப்பிடமாக மாறும். இறை கடாட்சம் பெற்ற இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
மூங்கில், வேம்பு, தேக்கு , மகாகொனி, சரக்கொன்றை, அத்தி, பிய்யன் போன்ற மரங்கள் நடுவது சிறப்பு.
K.Sakthipriya
Krishi Jagran