வேளாண்மைத்துறை மூலம் திருத்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2022-23ம் ஆண்டு சிறப்பு பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் II சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம் II , பருத்தி II ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பு வெளியான கிராமங்களில், குறிப்பிடப்பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள். பயிர்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் (Voluntary Scheme) அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு, போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.
சிறப்பு பருவத்திற்கு 2022-2023ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பருவத்திற்கு நெல் II வருவாய் கிராம அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் II பயிருக்கு பிரிமயத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.513, பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15 நவம்பர் 2022 ஆகும். மக்கச்சோளம் II, பருத்தி II பயிர்களுக்கு பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் பயிருக்கு பிரிமியத் தொகை, ஒரு ஏக்கருக்கு ரூ.390, பருத்தி II பயிருக்கு பிரிமியத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.423 ஆகும். இவற்றிற்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.22 ஆகும்.
கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். மேலும், விவசாயிகள் சிறப்புப் பருவத்தில் சாகுபடி காலம் (நெல் II- 01 ஆகஸ்ட் 2022 முதல் 15 நவம்பர் 2022, மக்காச்சோளம்-II, பருத்தி II - 01 செப்டம்பர் 2022 முதல் 15 நவம்பர் 2022) சாகுபடி செய்தவர்கள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.
விவசாயிகளின் முன்மொழிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரியிடம் (VAO) பெறப்பட்ட நெல் II, மக்காச்சோளம் II, பருத்தி II பயிர் சாகுபடிக்கான அசல் அடங்கல் அல்லது இ-அடங்கல் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டில் விவசாயிகள் தங்களின் நெல் பயிர் சாகுபடி, வருவாய் கிராமம், சர்வே எண், பயிர் சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, விவசாயிகள் RPMFBY திட்டத்தின் கீழ் நெல் II , மக்காச் சோளம் II, பருத்தி II சிறப்பு பருவத்திற்கு உரிய தேதிக்குள் பதிவு செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பு