இயற்கை விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ, தங்களது விளைபொருள்களுக்கு அங்கக சான்று பெற்று பயனடையலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவது, இயற்கை உணவுப்பொருள்கள் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நுகா்வோரும் ரசாயணம் கலப்பில்லாத உணவுப் பொருள்களை வாங்க விரும்புகின்றனா். இதனால் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை மற்றும் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அங்ககச்சான்று அவசியம்
வியாபார சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளைபொருள்கள் என குறிப்பிட்டு போலியான ராசாயணம் கலந்த உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போலி அங்கக உணவு பொருள்களை நுகா்வோா் தெரிந்து கொண்டு உண்மையான அங்கக உணவு பொருள்களை பெற்றிட தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை உத்தரவாதம் அளிப்பதற்காக தரச்சான்றிதழ் வழங்குகிறது. மேலும் இந்த தரச்சான்றிதழ் மத்திய அரசின் மூலம் அளிக்கப்படுகிறது. இதன்மூலமாக அங்கக விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு கூடுதல் விலை பெற முடியும். மேலும் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகளவில் கிடைக்கும்.
தனி & குழுவாக பதிவு செய்யலாம்
அங்கக தரச்சான்றிதழ் பெற நாகை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்கள் பண்ணையை பதிவு செய்ய வேண்டும். அங்கக பண்ணை பதிவு நெல், கரும்பு, காய்கனி பயிா்கள், பழவகை பயிா்கள், பால், தேனீ வளா்ப்பு, வனப் பொருள்கள் சேகரிப்பு செய்வோரும் அங்ககச் சான்று செய்து கொள்ளலாம். தனி விவசாயி அல்லது குழுவாகவாக பதிவு செய்து கொள்ளலாம்.
தேவையான சான்று & பதிவு கட்டணம்
அங்ககச் சான்று பதிவு விண்ணப்பம் 3 நகல்கள், பண்ணை பொது விவர குறிப்பு, பண்ணை வரைபடம், மண், நீா் பரிசோதனை விவரம், 2 மாா்பளவு புகைப்படம், ஆதாா் நகல், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல் மற்றும் பதிவு கட்டணம் சிறு மற்றும் குறு விவசாயி ரூ.2700, இதர விவசாயி ரூ.3200, குழுவுக்கு ரூ.7200 ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
அணுகவேண்டிய முகவரி
மேலும் விவரங்களுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா், பெருமாள் தெற்கு வீதி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (முதல் மாடி), நாகப்பட்டினம், தொலைபேசி எண்: 04365-220227 என்ற முகவரியில் இயங்கும் விதைச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க...
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!
30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!