நெற்பயிரானது வயல்வெளியில் விதைப்பு முதல் அறுவடை வரையிலும் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலும் பல்வேறு வகையான பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் மற்றும் எலிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளாகிறது.
இந்நிலையில் நெற்பயிரில் தண்டு பகுதி மற்றும் இலைகளை தாக்கும் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் போன்றவற்றிலிருந்து பயிரினை காக்க ”கைவினை முறை” மற்றும் “குணாதிசிய முறையில்” ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்வது குறித்த தகவல்களை முனைவர்களாகிய ரமேஷ், ராம் ஜெகதீஷ், யுவராஜா, (தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்) மற்றும் சண்முகம் (பயறுவகைத்துறை- TNAU) ஆகியோர் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு-
கைவினை முறைகள்:
- முட்டைக் குவியல், புழு மற்றும் கூட்டுப் புழுக்களை சேகரித்து அழித்தல்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றுதல்.
- வயலில் 1 லிட்டர் மண்ணெண்ணையை 5 கிலோ மணல் அல்லது தவிட்டில் கலந்து தூவிவிட்டு, பின்பு வரப்புகளின் இரு ஒரங்களிலும் இருவர் நின்று கொண்டு, நீண்ட கயிற்றைப் பயிர்களின் மீது படுமாறு வேகமாக இழுத்துச் சென்று கூண்டுகளை நீரில் விழ வைத்து கூண்டுப்புழுக்களை அழிக்கலாம்.
குணாதிசிய முறைகள்:
- பருவத்திற்கேற்ற பூச்சி & நோய் தாக்காத இரகங்களை பயன்படுத்துதல். (புகையான் - ADT 36, 37, Co-42, 46, Co (RH)-3; குருத்துப்பூச்சி- ADT-47, 48, TKM-6, ASD-20, TPS-5; ஆனைக்கொம்பன் ஈ- ADT-45, 48, MDU-3; பச்சைத் தத்துப்பூச்சி- ADT-43, 48, ADT-44, Co-46, Co (RH)-3; இலைமடக்குப்புழு- TKM-6, ADT-44, 46, 50, TPS-5.)
- பயிர் பரப்பிலிருந்து 20 மீட்டர் தள்ளி விளக்குப்பொறிகளை 5 ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் இரவில் 6 முதல் 11 மணி வரை எரிய வைத்து வளர்ச்சியடைந்த அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
- சாறு உறிஞ்சும்,பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 12 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
- இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து ஆண் குருத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
நெற்பயிரை 1378 வகையான பூச்சி சிற்றினங்கள் (Species) பல்வேறு வழிகளில் தாக்குவதாகவும், அவற்றில் 100-க்கும் அதிகமான பூச்சி இனங்கள் நிலையானதாகவும், 20 முதல் 30 வகையான பூச்சி இனங்கள் பொருளாதார சேதத்தை உண்டு பண்ணுவதாகவும், பெரும்பாலான பூச்சி இனங்கள் பருவநிலைக்கு ஏற்பவும், அவை பயிரிடப்படும் இடங்களைப் பொருத்தும் குறைந்த அளவில் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பூச்சித்தாக்குதலால் ஏற்படும் சேதத்தின் மூலம் 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், நெற்பயிரினை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடியுங்கள். அதுத்தொடர்பான சந்தேகம் ஏதேனும் இருப்பின், அருகிலுள்ள வேளாண் அலுவலர்களை தொடர்புக் கொள்ளவும்.
Read more:
KVK 50: ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் அசத்தும் பெண்- வெற்றிக்கு வழிக்காட்டிய அரியலூர் கேவிகே
மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?