புதுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை நெல் சாகுபடி விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும் என வேளாண்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விதை மற்றும் பரப்பு (Seed and area)
திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ நெல் விதை போதுமானது. மேலும் மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் அமைப்பதற்கு ஒரு சென்ட், அதாவது நாற்பது சதுர மீட்டர் இடப்பரப்பு போதுமானது.
நிலத்தைத் தயார்படுத்துதல் (Land preparation)
நாற்றாங்கால் அமைக்க விருக்கும் நிலத்தினை நன்கு உழவு செய்து தயார்படுத்த வேண்டும். ஒரு சென்ட் நாற்றாங்கால் பரப்பளவில் ஐந்து மீட்டர் நீளம் மற்றும் ஒரு மீட்டர் அகலம் கொண்ட எட்டு மேட்டுப் பாத்திகளை அமைக்க மேடைகள் ஏற்படுத்த வேண்டும்.
பின்னர் பாத்திகளைச் சுற்றி வாய்க்கால் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
மேடைகள் மீது எளிதில் கிடைக்கக்கூடிய பாலித்தீன் அல்லது உரச் சாக்கினை அதன் மீது பரப்ப வேண்டும். இவ்வாறு பரப்பியப் பின்னர் அதன் மீது வயல் மண், நன்கு மட்கிய தொழுஉரம் மற்றும் நாற்று மேடை ஒன்றிற்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்கு 760 கிராம் டி.ஏ.பி உரத்தினை நன்குப் பொடி செய்துக் கலந்து மேடைகளில் பரப்ப வேண்டும்.
2 கிலோ விதை (2 kg of seed
1 ஏக்கருக்கு தேவையான 2 கிலோ விதை நெல்லை ஊற வைத்து முளைகட்டி மூன்றாம் கொம்பு பருவத்தில் நெல் விதையினை 8 பாத்திகளில் சீராகத் தூவ வேண்டும்.
பின்பு விதை நெல்லின் மேல் சிறிது மண்ணைத் தூவி மூடவேண்டும். விதைப்பு செய்த பின்பு மேட்டுப்பாத்திகளை வைக்கோல் கொண்டு மூட வேண்டும்.
வைக்கோலை அகற்றுதல் (Straw removal)
விதைப்பு செய்த பிறகு முதல் மூன்று நாட்களுக்குப் பூவாளி கொண்டுத் தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்காம் நாள் முதல் வைக்கோலை அகற்றிவிட்டு மேட்டுப்பாத்திகளைச் சுற்றியுள்ள வாய்கால்களில் நீர் பாய்ச்ச வேண்டும்.
14 நாட்களில் நாற்றுக்கள் வளர்ந்து நடவுக்கு தயாராகி விடும். நாற்றுகளைப் பெயர்த்து எடுத்து இரும்பு தட்டு அல்லது முறம் போன்ற வற்றில் எடுத்துச் சென்று நடவு வயலில் நடவு மேற்கொள்ளலாம்.
செலவு குறைகிறது (The cost goes down)
இவ்வாறு திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் அமைப்பதனால் விதைச் செலவு, உரச் செலவு, நாற்றாங்கால் அமைக்கும் செலவினம் மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு செலவினம் ஆகியவை குறைகின்றன.
நீர் சேமிப்பு (Water storage)
இம்முறையில் சாகுபடி செய்வதால் 40 சதவீதம் நீர் சேமிக்கப்படுகின்றது. மேலும் இளம் வயது நாற்றுக்களை நடவு செய்வதால் அதிகக் கிளைகள் வெடித்து அதிக மகசூல் கிடைக்கின்றது.
இவ்வாறு புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!
300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?