Farm Info

Tuesday, 04 May 2021 08:12 PM , by: R. Balakrishnan

Credit : Dinakaran

உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை (Copra) உற்பத்தி செய்வதற்கு நவீன இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. குடிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மேலும், அதனை சார்ந்து கொப்பரை உற்பத்தியும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மழைக்காலங்களில் கொப்பரை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, நவீன முறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கொப்பரை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்களில் சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில் நவீன இயந்திரம் (Machine) அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயந்திரப் பயன்பாடு

உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் சூரிய ஒளியில் உலர்த்தும் பழமையான முறையிலேயே அதிக அளவில் கொப்பரை உற்பத்தி (Copra Production) மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் கொப்பரை உற்பத்தியில் தேக்க நிலை ஏற்படுகிறது. இங்கு மறைமுக சூடான காற்றின் மூலம் காய வைக்கும் இயந்திரம் தற்போது நிறுவப்பட்டுள்ள்ளது. விவசாயிகள் தங்கள் தோட்டத்திலுள்ள காய்களை முழுதாக இங்கு கொண்டு வந்தால் இங்குள்ள இயந்திரத்தின் மூலம் இரண்டாக உடைத்துக் கொள்ளலாம். இதில், தேங்காய் தண்ணீரையும் வீணாகாமல் சேகரிக்க முடியும். பின்னர் உடைத்த தேங்காய்களை இந்த இயந்திரத்திலுள்ள அறையில் போட்டு மூடி விட வேண்டும்.

அங்கு சூடான காற்றின் மூலம் சுமார் 8 மணி நேரத்தில் தேங்காய் காய்ந்து விடும். அதன்பிறகு அந்த தேங்காய்களை சேகரித்து சிரட்டையை நீக்கி விட்டு இயந்திரத்திலுள்ள மற்றொரு அறையிலிட்டு மூடி விட்டால் சுமார் 8 மணி நேரத்தில் தேவையான ஈரப்பதத்துடன் தரமான கொப்பரைகள் தயாராகி விடும்.

Credit : Newstm

இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் தேங்காய்களிலிருந்து கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். இதில், சூடான காற்று உற்பத்தி செய்வதற்கு விறகு அடுப்பு பயன்படுத்துகிறது. இதில், விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வீணாகும் மட்டைகள் உள்ளிட்ட மரக் கழிவுகளையும் தேங்காய் சிரட்டைகளையுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கொப்பரை உற்பத்தி

பொதுவாக, திறந்த வெளியில் சூரிய ஒளியின் மூலம் காய வைத்து கொப்பரை உற்பத்தி செய்வதற்கு சுமார் 6 முதல் 8 நாட்கள் தேவைப்படும். இந்த இயந்திரம் மூலம் அதிகபட்சம் 2 நாட்களில் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். மேலும், திறந்த வெளியில் கொப்பரை உற்பத்தி செய்யும்போது காற்றிலுள்ள தூசி மற்றும் கிருமிகளால் கொப்பரையில் தரம் குறையும் சூழல் உள்ளது. அத்துடன் கொப்பரையில் பூஞ்சை தாக்குதலை தவிர்க்க சல்பர் (Sulphur) போன்ற ரசாயனங்களை ஒரு சில கொப்பரை உற்பத்தியாளர்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதுபோன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் விதமாகவும் மழைக்காலங்களில் கொப்பரை உற்பத்தியை சீராக மேற்கொள்ளும் வகையிலும் இந்த இயந்திரத்தின் பயன்பாடு இருக்கும். இவை விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று இயந்திர தயாரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் படிக்க

அதிக மகசூலுக்கு விதைப் பரிசோதனை அவசியம்!

பொள்ளாச்சியில் இருந்து 1 கோடி இளநீர் ஏற்றுமதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)