நவீன தொழில்நுட்பத்தில் வளர்க்கப்படும் இன்டோர் காளான் (Mushroom) பண்ணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு அசோலா வளர்த்து அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரைக் கொண்டு கீரை மற்றும் கற்றாழை வளர்க்கும் புதிய தொழில்நுட்பத்தில் தண்ணீரை சிக்கனப்படுத்தலாம்.
காளான் வளர்ப்பில் அசோலா:
காளான் வளர்க்கும் போது வைக்கோல் ஈரப்பதத்தால் (Moisture) வளருமே தவிர அது தண்ணீரை உறிஞ்சாது. மழைக்காலத்தில் குடிலில் தினமும் ஒரு முறையும் வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறையும் தண்ணீர் தெளித்து காளான் (Mushroom) வளர்வதற்கான ஈரப்பதத்தை பாதுகாப்போம். அந்த தண்ணீர் கீழே விழுந்து வழியும் போது அதை ஒரு குழாய் மூலம் சேகரித்து பக்கத்தில் தொட்டி அமைத்து அந்த தண்ணீரில் அசோலா வளர்க்கலாம்.
தண்ணீர் சிக்கனம்:
அசோலா வளர்ப்பிற்கு சிமென்ட் தொட்டியில் மாட்டுச்சாணம் (Cow dung) சூப்பர் பாஸ்பேட்டை 3-க்கு 1 என்ற அளவில் சேர்க்க வேண்டும். ஒரு கிலோ அசோலா தயாராவதற்கு 109.54 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கீரை மற்றும் கற்றாழை செடி வளர்க்க பயன்படுத்தலாம். ஒரு கிலோ கீரை உற்பத்தி (Production) செய்வதற்கு 234.29 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மொத்தமாக ஒரு கிலோ காளான், ஒரு கிலோ அசோலா, ஒரு கிலோ கற்றாழை மற்றும் ஒரு கிலோ கீரை தயாரிப்பதற்கு 2,286.9 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
காளானுக்கு தெளிக்கப்படும் சாதாரண தண்ணீர் அசோலா வளர்ப்பின் போது ஊட்டச்சத்து நிறைந்ததாக மாறுகிறது. இது காற்றிலுள்ள நைட்ரஜன் (Niyrogen), பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்தை தண்ணீரில் நிலை நிறுத்துகிறது. உரச்செறிவூட்டப்பட்ட தண்ணீராகிறது. அசோலா உற்பத்தி குறையும் போது அந்தத் தண்ணீரை எடுத்து கீரை வளர்க்க பயன்படுத்தலாம்.
சுழற்சி முறை:
தண்ணீரை சசிக்கனப்படுத்தி பயன்படுத்துவதால், 10 - 12 சதவீத வளர்ச்சி அதிகரிக்கிறது. கீரை மட்டுமல்ல காய்கறி உற்பத்திக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். காளான், அசோலா, கீரை அல்லது காய்கறி உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தண்ணீரைக் கொண்டு சுழற்சி (Rotational) முறையில் பயன்படுத்தி தண்ணீரை சிக்கனப்படுத்தி சாதிக்கலாம்.
மேலும் தகவலுக்கு
ராஜேந்திரன்
ஒருங்கிணைப்பாளர்,
ரூரல் பயோடெக்னாலஜி யூனிட் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி
மதுரை
94439 98480.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மியாவாக்கி முறையில் 70 ஆயிரம் மரங்களை வளர்த்து சாதனை படைத்த இளம் தொழிலதிபர்!
பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!