விவசாயத்தில் பெருகி வரும் தொழில் நுட்பங்களாலும் நவீன மயமாதலாலும் முன்னோர்கள் பாரம்பரியமாக செய்துவந்த சில வழக்கங்களை மறந்து வருகிறோம். இவற்றை மீட்டெடுத்து பாரம்பரிய முறையில் விதைகளை பாதுகாக்கலாம் என்கின்றனர் திண்டுக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன், விதைப் பரிசோதனை அலுவலர் சிங்காரலீனா.
நெல், சோளம் போன்றவற்றை சேமிக்கும்போது அந்துபூச்சி தாக்குதல் இருக்கும். அதற்கு புங்கம், வேப்பிலை, நொச்சி இலைகளை தானியத்துடன் கலந்து வைத்து பாதுகாக்கலாம். பயறு வகைப்பயிர்கள் சேமிக்கும் போது செம்மண் அல்லது வேப்ப எண்ணெய் (Neem Oil) கலந்து வைத்தால் பூச்சிகளை துார விரட்டலாம். துளசி, வேப்பிலை, ஆடாதொடா காய்ந்த இலைகளை பயறுவகைப் பயிர் விதையுடன் கலந்து வைக்கும்போது பூச்சிகள் சேதாரத்தை உருவாக்காது. துவரைப் பயிரை உடைக்க அதன் மீது நல்லெண்ணெய் தடவி வெயிலில் காய வைத்தால் சுலபமாக உடைபடும்.
முளைப்புத்திறன்
தேக்கு விதைகளை கொதிநீரில் ஊறவைத்து நட்டால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். பயறுவகைகளை சேதப்படுத்தும் பயிறு வண்டுகளை தடுக்க அமாவாசை அன்று எடுத்து காயவைக்கவேண்டும். துவரையைச் சேமிக்கும் முன்பாக செம்மண் சாந்து கலந்து காய வைத்து சேமிக்கலாம். பயறு வண்டுகள் முட்டையிடுவது தடுக்கப்படும். பாகற்காய், புடலை, சுரை போன்ற வகை விதைகளை சாம்பலுடன் கலந்து காயவைக்கவேண்டும்.
மஞ்சள் அறுவடை செய்தவுடன் சாணி கரைசலை இட்டால் பூச்சி, பூஞ்சாண நோய்களை தடுப்பதோடு நூற்புழு தாக்குதலும் தடுக்கலாம். பழவகைகள் மற்றும் காய்கறி விதைகளை மண்பானையில் சேமித்தால் அதிக நாளுக்கு கெடாமல் இருக்கும். முளைப்புத்திறன் 6 மாதம் வரை நன்றாக இருக்கும்.
நீர்த்த கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து பின் விதைத்தால் இலைப்புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் குறையும். நெல் விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நெல் துங்ரோ நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல் விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தும்.
மக்காச்சோளத்தை கதிரின் மேல் உறையை உரிக்காமல் இருந்தால் மூன்று மாதத்திற்கு மேல் சேமிக்கலாம். விதைப்பிற்கு முன்பு மக்காச்சோளத்தை வெந்நீரில் 3 முதல் 6 மணி நேரம் ஊறவைத்து பின்பு நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும். இதனால் நல்ல முளைப்புத் திறனுடன் குருத்து துளைப்பான் நோயையும் கட்டுப்படுத்த முடியும்.
கம்பு விதையை விதைப்பிற்கு முன் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்தபின் விதைத்தால் விரைவாக முளைக்கும். சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து பின் வெயிலில் உலர்த்தி விதைத்தால் வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயையும் கட்டுப்படுத்தலாம். விதைப்பிற்கு முன் இரவு முழுவதும் 1:10 என்ற விகிதத்தில் கோமியம், தண்ணீர் கலந்து கரைசலில் கேழ்வரகு விதையை ஊற வைத்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
ஆமணக்கு விதையை வறுத்து தூளாக்கி அதை துவரைப் பயிறுடன் கலந்து சேமித்தால் பூச்சி தாக்குதலைத் தடுக்கலாம். துவரை சேமிக்கப்பட்ட கலன்களில் காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால் வண்டு தாக்குதலை தடுக்கலாம். 50 கிலோ துவரைப் பயிருடன், 1 கிலோ வசம்பு தாவர இலைத்தூளை கலந்து சேமித்தால் ஓராண்டு வரை சேமிக்க முடியும். நன்கு காயவைத்த துவரைப் பயிரை கோணி சாக்குப்பையில் சேமிக்கும் முன்பாக காய்ந்த நாய்த்துளசி இலைகளை அடியில் இட்டு சேமித்தால் காய் துளைப்பான் தாக்கத்தைத் தடுக்கலாம்.
ஆமணக்கு விதைகளை விதைப்பதற்கு முன் விதையை 20 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைத்தால் விதை விரைவாக முளைக்கும்.
பருத்தி விதை
பருத்தி விதையை ஒரு கிலோவிற்கு 200மிலி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து பசுஞ்சாணத்தை தடவி இரவில் காய வைத்து விதைத்தால் பூச்சித் தாக்குதலை தவிர்க்கலாம். புடலை விதைகளை சாணிப்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் விதைகள் விரைவாக முளைப்பதோடு வறட்சி காலத்தைத் தாங்கி வளரும்.
பீர்க்கை காய்மீது உள்ள வரிகளை வைத்து அவை இனிப்பாக அல்லது கசப்பாக இருக்கும் என கண்டுபிடிக்கலாம். இரட்டைப்படையில் இருந்தால் இனிக்கும் அவை ஒற்றைப் படையில் இருந்தால் கசக்கும் என்றனர்.
தொடர்புக்கு: 97883 56517
மேலும் படிக்க
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!