ஏராளனமான சத்துகளைக் கொண்ட, பாரம்பரிய வகையான கருப்புக் கவுனி நெல்லை இயற்கை உரங்களைப் (Natural Compost) பயன்படுத்தி பயிரிட்டு வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர். ஒரு ஆளையே மறைக்கும் அளவுக்கு 6 அடி உயரம் வரை வளர்ந்து காற்றில் அலைபாயும் நெற்பயிர், கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஏர் பூட்டி உழவு ஓட்டி பார் அடித்து, பக்குவமாக நிலத்தை சமன் செய்து, பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல் என இயற்கை இடுபொருட்களைப் (Natural Inputs) பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிமூலம்.
கருப்புக் கவுனி:
கிச்சிலி சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா என பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டு வருவதாகக் கூறும் ஆதிமூலத்தின் வயலை தற்போது ”கருப்புக் கவுனி” நெல் அலங்கரித்து வருகிறது. கருப்புக் கவுனி நெல்லில் இருந்து பெறப்படும் கருமை நிற அரிசியில் (Black Rice) ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தியதால் நம் முன்னோர்கள் பல ஆண்டுகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகக் குறிப்பிடும் ஆதிமூலம், மண்ணை (Soil) நச்சுப்படுத்தாத இந்த விவசாயம் மனதுக்கு நிறைவைத் தருவதாகக் கூறுகிறார்.
உடல் நலத்திற்கு ஏற்ற அரிசி
கருப்புக்கவுனி அரிசியின் கருப்பு நிறத்துக்குக் காரணமாக இருக்கும் ‘ஆன்தோசயானின் (anthocyanin)' என்னும் நிறமி இதயம், மூளை மற்றும் ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம் (Proteins), இரும்புச் சத்தையும் (Iron) கொண்டுள்ள கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது என்றும் கூறும் மருத்துவர்கள், குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இந்த அரிசி ஒரு வரம் என்கின்றனர்.
நிலத்தை நச்சுத்தன்மையடையாமல் பாதுகாக்க, தன்னைப் போன்றே இயற்கை முறையில் விவசாயம் (Organic farming) மேற்கொள்ளவும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாரம்பரிய நெல்லை பயன்படுத்தவும் அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும் என இவர் கூறியுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது! 4.5 கோடியை அளித்தது தோட்டக்கலை துறை!
நெல் கொள்முதலில் கிடைக்குமா 20% ஈரப்பதம்? கடலூர் விவசாயிகள் கோரிக்கை!