இரு பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது, 'இல்லம்தோறும் இயற்கை உரம்' அமைப்பு. ஒன்று, திடீரென விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் தக்காளி விலையைப் பார்த்து அச்சப்படாமல் தடுக்கிறது. மற்றொன்று, எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஆரோக்கியத்துக்கு அடித்தளம் போட்டுத் தருகிறது.
இல்லம்தோறும் இயற்கை உரம் (Organic Fertilizer at Every Home)
'இல்லம்தோறும் இயற்கை உரம்' என்பது, கோவையை தலைமையிடமாகக் கொண்டு, நண்பர்கள் சிலரால், 'வாட்ஸ்ஆப் (Whatsapp)' குழுவாக துவக்கப்பட்ட இந்த அமைப்பு, இப்போது ஓர் இயக்கமாக உருவெடுத்து வருகிறது. கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, 250க்கும் மேற்பட்டவர்கள் இக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருடைய வீடுகளிலும் கொல்லைத்தோட்டம், மாடித்தோட்டம் என ஏதாவது ஒரு வகையில், காய்கறி, பழங்கள் விளைவிப்பதற்கான தோட்டம் இருக்கிறது. எதையும் சந்தையில் விலை கொடுத்து வாங்காமல், நம் வீட்டுத்தோட்டத்தில் விளைவதைச் சாப்பிடுவது சந்தோஷம் என்றால், உண்மையாகவே இயற்கையாக விளைந்தது என்ற உணர்வோடு சாப்பிடுவது பேரின்பம். அந்த இன்பத்தை எல்லோருக்கும் தரும் நோக்கில், இந்த அமைப்பு செயல்படுகிறது.
வீடுகளில் வளர்க்கும் செடி, கொடிகள், மரங்களைப் பாதுகாப்பது எப்படி, இயற்கையான உரங்களை சிறிய அளவில் தயாரித்து எப்படிப் பயன்படுத்துவது என, பல விஷயங்களையும் இதில் பகிர்கிறார்கள். குறுகிய இடத்தில் எவ்வளவு அதிகமான காய்கறிச் செடிகளைப் பயிரிட முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக பலரும் விளக்குகிறார்கள். தினந்தோறும் தங்கள் வீடுகளில் விளையும் காய்கறிகளை அழகழகாக அடுக்கி, அதை படமெடுத்து குழுவில் பதிவேற்றுகிறார்கள். அதைப் பார்க்கும் போதே, உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்கிறது. உடனே தோட்டம் போட வேண்டுமென்ற உணர்வு பீறிட்டுக் கிளம்புகிறது.
இயற்கை உரம் (Organic Fertilizer)
அன்றாடம் பயன்படுத்தும் உணவுக் கழிவுகளில் இருந்தே, இயற்கை உரத்தைத் தயாரிக்கும் முறையை அழகாகக் கற்றுத் தருகிறது இக்குழு. இதில் இருக்கும் பலரும் பேராசிரியர்கள்; பலரும் பாரதியார் பல்கலையில் பணியாற்றுபவர்கள். உறுப்பினராக உள்ள லட்சுமண பெருமாள்சாமி, சுற்றுச்சூழல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறார். பல்கலை வளாகத்தில் பல ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்துள்ள இவர், வடவள்ளியில் உள்ள வீட்டில், பல ஆண்டுகளாக மாடித்தோட்டம் (Terrace Garden) வைத்திருக்கிறார்.
இங்கு தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரை, காராமணி, கீரை ஆகியவற்றுடன் மலைக்காய்கறியான முட்டைக்கோசும் விளைந்து நிற்கின்றன. இவற்றோடு மருத்துவ பயிர்களான கீழாநெல்லி, துளசி, வெட்டிவேர், லெமன்கிராஸ், டிபில்லி, அதிமதுரம், மஞ்சள், வெற்றிலை என அத்தனை செடிகளும் இருக்கின்றன. பாகல், சிறியாநங்கை, சர்க்கரைக்கொல்லி என டெங்கு, சர்க்கரை நோய்களுக்கான தீர்வுகளையும் தருகிறது இவருடைய தோட்டம். இவருடைய தோட்டத்திற்கான அனைத்துச் செடிகளுக்கும், சமையலறைக் கழிவிலிருந்தே இயற்கை உரம் தயாரிக்கிறார். அந்தத் தோட்டத்தைப் பார்த்தாலே மனதிலிருந்து வாட்டம் ஓட்டமெடுத்து விடுகிறது.
லட்சுமண பெருமாள்சாமி கூறுகையில், ''15 ஆண்டுகளாக எங்கள் வீட்டுக்கு எந்தக் காய்கறியும் கடையில் வாங்கியதில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என் வீட்டுத் தோட்டத்துக் காய்கறிகளே உதவியது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை,'' என்றார். இல்லம்தோறும் பரவட்டும்; ஆரோக்கியத்தின் அற்புதம்.
மேலும் படிக்க