Farm Info

Monday, 16 September 2024 02:43 PM , by: Muthukrishnan Murugan

NEEM

வரப்புயோரங்கள், சாலையோரங்கள் என அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடிய மர வகைகளில் ஒன்று  தான் வேப்ப மரம். இம்மரத்தின் வேப்பங்கொட்டையினை இயற்கை பூச்சி விரட்டியாக எந்த வகையில் திறம்பட பயன்படுத்த முடியும் என்பது குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

வேப்பங்கொட்டையின் முக்கியத்துவம் தற்போது விவசாயிகள் மத்தியில் உணரப்பட்டு அதனை சேகரிக்க கிராமப்புறங்களில் சிறுவர்கள் முதல் வயதான மகளிர் வரை ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகளும் போட்டி போட்டிக் கொண்டு வாங்கத் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பங்கொட்டை எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்கு  முன் பூச்சிகளின் வகைகள், மற்றும் வாழ்க்கை பருவம் குறித்து தெரிந்துக் கொள்வது அவசியம்.

பூச்சிகளின் வகைகள்: (பூச்சிகளின் வாயமைப்பை வைத்து 3 வகைகளாக பிரிக்கலாம்)

  • சாறு உறிஞ்சும் பூச்சிகள்
  • சுரண்டி தின்னும் பூச்சிகள்
  • கடித்து தின்னும் பூச்சிகள்

பூச்சிகளின் வாழ்க்கை பருவம்:

பொதுவாக பூச்சிகளுக்கு நாயை விட மோப்ப சக்தி அதிகம். அந்த பூச்சிகள் முன்னிரவில் (7 PM- 10 PM) மணிக்குள் முட்டை இடுகின்றன. அவை இருட்டில், தான் முட்டையிட வேண்டிய பயிரின் பாகத்தை தன்னுடைய மோப்ப சக்தியால், தெரிவு செய்து அதன் மேல் முட்டையிடுகின்றன. அந்த முட்டைக்குள் கரு வளர்ந்து 4-5 நாட்களில் புழுக்கள் வெளி வந்து பயிரின் சாறை உறிஞ்சுகின்றன. நன்றாக புழுக்கள் வளர்ந்து, தன்னுடைய தோலை உரிக்கின்றன (சட்டையை கழற்றுகின்றன).

தொடர்ந்து பயிரை சாப்பிட்டு வளர்ந்து, 4-5 தடவைகள் தோலுரித்து பெரிய புழுக்களாக வளர்கின்றன. பின்பு கூட்டுப் புழுக்களாக மாறுகின்றன. கூட்டுப்புழு பருவத்தில் பயிரில் எவ்வித சேதம் ஏற்படுவதில்லை. அவை சில நாட்கள் கழித்து தக்க பருவ கால சூழ்நிலைக்கேற்ப அந்துப்பூச்சியாக (வண்ணத்துப்பூச்சியாக) உருமாறி மறுபடியும் இனவிருத்தி செய்ய முட்டையிடும். இது தான் பொதுவான பூச்சிகளின் வாழ்கை பருவமாகும்.

வேப்பங்கொட்டை சாற்றின் பயன்பாடு:

  • வேப்பங்கொட்டை சாறு என்பது இயற்கையான பூச்சி விரட்டியாகும். இதில் எவ்வித இரசாயனமும் இல்லை. மனிதர்களுக்கும், பயிருக்கும் பாதுகாப்பாகவும் சுற்றுப்புற சூழலியல்கேற்ற பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.
  • வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால், பயிரின் வாசனை மாறிவிடுகிறது. முட்டையிடுவதற்காக வரும் அந்துப்பூச்சிகள் இருட்டுக்குள் பயிரை கண்டுப்பிடிக்க முடியாமல் குழம்பிப்போகும் சூழ்நிலை உண்டாகும்.
  • இதனையடுத்து பூச்சிகள் முட்டையிட வேறு இடம் தேடி பறந்து விடுகின்றன. அந்துபூச்சிகள் தாம் முட்டையிடும் இடத்தில் ஒருவித பசையை சுரந்து அவற்றால் முட்டையினை மூடுகின்றன. இதுவே வழக்கமான நடைமுறை. வேப்பங்கொட்டை சாறு தெளிக்கப்பட்ட நிலையில் அந்துப்பூச்சியால் பசையை சுரக்க இயலாது. பசை இல்லாததால் இலை பரப்பின் மீது முட்டைகள் ஒட்டுவதில்லை. இதனால் கீழே விழுந்து கரு களைந்து மண்ணில் மக்கி விடுகின்றன.

வேப்பங்கொட்டை சாறு 2%, 5% என்ற அளவில் அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் 2%, பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி விரட்டியாக உள்ளது. இதைப்போல், வேப்பம் புண்ணாக்கு பொதுவாக அடியுரமாகவும், தண்டுகளை தாக்கும் கூண்வண்டு, படைப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ அடியுரமாக ஓருங்கிணந்த பயிர்பாதுகாப்பு முறையில் பயன்படுத்தப்படுகிறது.

Read also: 6 வது ஆண்டில் PM-KMY: குறைந்த பிரீமியத்தில் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!

வேம்பில் இயற்கையாக உள்ள கசப்பு தன்மையானது பூச்சிகளை விரட்டுவதுடன் அவைகளை குழப்பி விடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289 )

Read more:

நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?

பிளாங்க்டன் பிளஸ் & ஹார்டிபிளஸ் சந்தைக்காக ICAR-CIBA எடுத்த முன்னெடுப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)