2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதனை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பு ஒன்றினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
பச்சரிசியினை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக கொள்முதல் செய்யும் நிறுவனமான தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிட் (NCCF) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வெளிச்சந்தை விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.35.20 வீதம் கொள்முதல் செய்யவும், அதனை அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கிடும் வகையில் மொத்தம் ரூ.77,29,00,550/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சர்க்கரை ரூ.40.614-க்கு கொள்முதல்:
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள சர்க்கரையினை, பொது விநியோகத்திட்டத்திற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்க்கரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள அக்டோபர் 2023 மாத விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.40.614 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யவும், அதனை அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கிடும் வகையில் மொத்தம் ரூ.89,17,77,925/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு:
2,19,57,402 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட ஏதுவாக, முழுக் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு சென்ற ஆண்டைப்போல் முழுக் கரும்பு ஒன்றுக்கு தோராயமாக ரூ.33/- வீதம் (போக்குவரத்து செலவினம் மற்றும் வெட்டுக் கூலி உட்பட) கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதலுக்கு தனிக்குழு:
மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைத்து அந்தந்த மாவட்ட அளவில் முழுக் கரும்பினை கொள்முதல் செய்து விநியோகம் செய்திட அனுமதித்தும், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களுக்கு உரிய நிதியினை ஒப்பளிப்பு செய்திட அனுமதி வழங்கிடும் வகையிலும் தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Read more: வடக்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு- ஜன.7 வரை மழைக்கு வாய்ப்பு
செலவினம்- மொத்தம் ரூ.238.92 கோடி:
பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றிற்கு ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ.238,92,72,741/-க்கு (ரூபாய் இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு இலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்) நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி வழங்கிட வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
Read more: பொங்கல் உட்பட ஜனவரி மாதம் இவ்வளவு நாட்கள் வங்கி விடுமுறையா?
இந்த உத்தரவின் மூலம் நடப்பாண்டிற்கான அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசி, முழுக் கரும்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஏதேனும் நிதியுதவி அறிவிக்கப்படுமா என்கிற ஆவல் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கெனவே கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி உட்பட சில மாவட்டங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில் - நடப்பாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் நிதியுதவி வழங்குவது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையினை ஏற்படுத்தும் என்பதால் அது தவிர்க்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் உள்ள சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Read more: அடிமாட்டு விலைக்கு போகும் சின்ன வெங்காயம்- வேதனையில் தமிழக விவசாயிகள்