தஞ்சாவூர் அருகே, இரண்டு நாட்களாக பெய்த மழையால், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையின் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்ச மாவட்ட விவசாயிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதுதான் ஆச்சர்யத்தின் உச்சம். இந்த அவல நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயத் தேவை.
தஞ்சாவூர் மாவட்டம், முன்னையம்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகளை, லாரிகள் மூலம் தனியார் அரவை ஆலைக்கும், வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
2 நாட்களாக மழை
இந்நிலையில், இரண்டு நாட்களாக பெய்த மழையால், தரையில் சவுக்கு கட்டைகள் அடுக்கி, அதன் மீது வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியதால், மூட்டைகள் கிழிந்து சேதமடைந்தன. எனவே சேதமடைந்த நெல் மூட்டைகளை, வேறு சாக்குகளில் மாற்றும் பணியில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இந்த நெல் மூட்டைகளை, லாரியில் ஏற்றி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மழை நீர் தேக்கம்
இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கியிருப்பதால், நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக புகார் வந்தது. ஆய்வு செய்த போது, நெல் மூட்டைகள் பெரிய அளவில் சேதமடையவில்லை. குறைவான மூட்டைகளே சேதமடைந்துள்ளன.
இழப்பு இருக்காது
அந்த நெல்லையும் காய வைத்து, வேறு மூட்டைகளில் அடைத்து, ஆலைக்கு அனுப்பி, அரிசியாக அரைத்து விடலாம். இழப்போ, சேதமோ ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் ஆறுதலக்காகக் கூறியபோதிலும், விவசாயிகள் கவலையும் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க...