உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 6 மாதங்கள் மட்டுமே பனை ஏறி பதனீர் இறக்கும் தொழில் தீவிரமாக நடைபெறும். இப்பகுதியில் இறக்கப்படும் பதனீர் நல்ல சுவையுடன் இருக்கும். இதனால் இங்குள்ள பதனீருக்கு கடும் கிராக்கியும் உண்டு. அதுமட்டுமல்ல, பதனீரை கொண்டு இப்பகுதியில் கருப்பட்டி, கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்பட்டி போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏராளமான இடங்களில் பதனீர் மூலம் கருப்பட்டி உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி குடிசை தொழிலாக நடந்து வருகிறது.
உடன்குடி கருப்பட்டி (UdanKudi palm jaggery)
`உடன்குடி கருப்பட்டி' என்றால் தமிழகம் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றது. விற்பனை செய்யப்படும் இடங்களில் `உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும்' என்று அறிவிப்பு பலகை வைத்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு ஓரளவு நல்ல மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் (Groundwater level) உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து தற்போது பதனீர் இறக்கும் தொழிலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. பனை மரத்தின் காய்ந்த ஓலைகள், தும்புகள், பனைமட்டைகள், மட்டையுடன் இணைந்த முள் போன்ற கருக்குகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல், பனை ஓலைகளை விரித்து விடுதல் போன்ற பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்படி செய்தால் பதனீர் தரும் பாளைகள் வேகமாக வரும் என்கிறார்கள்.
கருப்பட்டி உற்பத்தி (Palm Jaggery Production)
உற்பத்தி தொடங்கும் உடன்குடி பகுதியில் வழக்கமான குளங்களை விட 40 ஆண்டுகளுக்குப் பின், காணாமல் போன 5 குளங்களை சீரமைத்து, தண்ணீர் தேக்கி வைத்திருப்பதால் இந்த ஆண்டு நிலத்தடி நீர் நல்ல சுவையான நீர் உள்ள நிலமாக மாறி இருப்பதாலும் பதனீர் இறக்கும் தொழில் முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் கருப்பட்டி உற்பத்தியும் தொடங்கும் என்று கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா: வீட்டிலேயே தயாரிக்கலாம்!