நெல் சாகுபடியில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஒரு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது.
இருந்த போதிலும் ரசாயன பூச்சிக்கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்து முறையாகக் கடைப்பிடிப்பதால் பூச்சி மற்றும் நோய்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.
கோடை உழவின் அவசியம் (The need for summer plowing)
கோடை உழவு செய்வதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. வரப்புகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் விளக்குப் பொறி வைத்துப் பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் எண்ணிக்கையை கண்காணிக்கலாம்.
இலைவழி ஊட்டம் (Foliar feeding)
இதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடு முறைகளைக் கையாள்வதும் அவசியமாகிறது. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய தாவர வகை பூச்சி மருந்துகள் மற்றும் நோய்க்கட்டுப்பாடு காரணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். பஞ்சகாவ்யா கரைசலை 3 சதவீதம் இலைவழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.
இலை சுருட்டுப்புழு (Leaf curl worm)
ஐந்து சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்தல் வேண்டும். டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை, ஏக்கருக்கு 2 சி.சி அளவில் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை கட்டுதல் வேண்டும்.
பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ் உயிரியல் காரணி ஏக்கருக்கு 400 கிராம் தெளித்தல் அவசியம். தத்துப்பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாசனம் செய்தல் கட்டாயமாகிறது. வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 2 சதவீதம் தெளிக்க வேண்டும்.
வாடல் நோய் (Dryness)
வரப்பில் உள்ள களைகளை அகற்றுதல் இன்றியமையாதது. அதேநேரத்தில் எதிர்ப்புச் சக்தி கொண்ட ரகங்களை சாகுபடி செய்வது மிக மிக முக்கியம். சூடோமோனாஸ் உயிரியல் காரணி 0.2 சதவீதம் கரைசலை சரியான இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
இலைக்கருகல் நோய் (Leaf blight)
சூடோமோனாஸ் உயிரியல் காரணி 0. 2 சதவீதம் கரைசலை நடவு செய்த 45-ம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தல் வேண்டும்.
வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 2 சதவீதம் தெளிப்பது கட்டாயம். பசுவின் சாணம் 20 சதவீதம் கரைசலை நோய் கண்படும் தருணத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தல் அவசியமாகிறது.
மகசூல் (Yield)
இயற்கை வேளாண்மையில் நெல் சாகுபடி செய்யும் பொழுது ஆரம்ப கால சமயங்களில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு வாய்ப்புள்ளது. மேலும், உற்பத்தி செலவு குறைந்தது நிகர லாபம் அதிகரிக்கும். சுற்றுப்புறச் சூழல் மாசு படாதவாறு பாதுகாக்கப்படுகிறது.
தகவல்
செல்வநாயகம்
தஞ்சாவூர் மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர்
மேலும் படிக்க...
தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!