விவசாயத்தில் நல்ல வருமானத்தைப் பெற மகசூல் மிக முக்கியம். அந்த மகசூலைப் பாதிக்கும் பூச்சித் தாக்குதலை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு பயிரையும், ஒவ்வொரு விதமான பூச்சிகள் தாக்கி பயிரை நாசம் செய்யும். சரியான நேரத்தில் நாம் எடுக்கும் பூச்சி மேலாண்மை தான் நம் பயிரைக் காத்து, அதிக மகசூலைத் தரும். எலுமிச்சை விவசாயத்தைப் பொறுத்த வரையில், நல்ல மகசூலும், நல்ல விற்பனை விலை இருப்பதால், அதிகமான விவசாயிகள் எலுமிச்சையில் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர்.
இருப்பினும், எலுமிச்சையில் பூச்சி மேலாண்மையை கையாண்டால், மகசூல் பெருகும் என்பதால், சரியான தருணத்தில் விவசாயிகள் இதனை மேற்கொள்ள வேண்டும். எலுமிச்சையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்வது அவசியமான ஒன்றாகும். பூ பூக்காத எலுமிச்சை மரங்களுக்கு, ஒரு லிட்டருக்கு 10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் கலந்த கரைசலை தெளிக்க வேண்டும்.
எலுமிச்சை விவசாயம் (Lemon Farming)
இலைத் துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.5 மில்லி எடுத்துக்கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில், ஒரு லிட்டர் நீரில், ஒரு கிராம் தையோடிகார்ப் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை 20 லிட்டர் தண்ணீரில், இரவு ஊறவைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
ஆரஞ்சு நிற தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஜுலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வண்டு தாக்கிய மரத்தின் பட்டைகளை உரித்து, புழுவை அழித்து போர்டோ கலவையை பூச வேண்டும். மரத்தில் துளைகளை இட்டு 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி ஊற்றி, ஈர களிமண்ணால் மூடி விட வேண்டும். மரத்தினுடைய வயதைப் பொறுத்து சுற்றியுள்ள மண்ணில், கால் கிலோ பியூரடான் அல்லது கார்பரில் குருணை இடலாம்.
பூச்சி மேலாண்மை (Pest Management)
பழம் உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த, முதலில் களைச்செடிகளை அகற்ற வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி மாலத்தியான் மற்றும் கரும்பு ஆலைக் கழிவை கலந்து எலுமிச்சைத் தோட்டத்தில் பல இடங்களில் வைத்து அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேலும், விளக்குப் பொறிகளை வைத்தும் அந்துப்பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி குயினால்பாஸ் மருந்தை கலந்து தெளித்தால், வெள்ளை ஈக்களை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி குளோரிபைரிபாஸ் அல்லது மோனோகுரோட்டோபாஸ் மருந்தினைக் கலந்து அஸ்வினியைக் கட்டுப்படுத்தி விடலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் டைக்கோபால் 2.5 மில்லி அல்லது நனையும் கந்தகத்தை 2 கிராம் கலந்து தெளித்தால், துரு சிலந்தியை அகற்றி விடலாம். எலுமிச்சை பழங்களை அறுவடை செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பாக, மீதைல் யூஜினால் 10 கிராம் மற்றும் மாலத்தியான் கலவை 0.5 கிராம் உளிட்ட பொறிகளை ஒரு எக்டேருக்கு 30 வீதம் வைக்க வேண்டும். இந்த கலவையை வாரம் ஒருமுறை மாற்றினால் போதும்; பழ ஈக்களை ஒழித்துக் கட்டலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்பங்கொட்டை பருப்புசாற்றை 50 மில்லி கலந்து தெளித்தால், சில்லிட் நாவாய் பூச்சித் தாக்குதலை குறைத்து விடலாம். தையோமீத்தாக்சம் 1 கிராம் அல்லது இமிடாகுளோபிரிட் 0.5 மில்லி மருந்துகளை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்கலாம். நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு மரத்திற்கு 250 கிராம் கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தை நிலத்தில் இட்டு கொத்திக் கிளறி விட வேண்டும். மேற்கண்ட பூச்சி மேலாண்மையை, சரியான தருணத்தில் விவசாயிகள் மேற்கொண்டால் அதிக மகசூலைப் பெறுவது உறுதியாகும்.
மேலும் படிக்க
சிறுதானியங்களில் சத்துமாவுத் தயாரிப்பு: மகளிர் குழு அசத்தல்!
மதுரைப் பெண்ணின் இயற்கை விவசாயம்: உழவன் அங்காடியில் விற்பனை!