கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இந்நிலையில் கேழ்வரகு பயிரினை தாக்கும் இளஞ்சிவப்பு தண்டு துளைப்பானை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறியலாம்.
கேழ்வரகு எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பையாகும். இந்தியா போன்று ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் விளைவிக்கப்படுகிறது. இப்பயிர்களை பெருமளவில் தாக்கும் நோயான இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் இப்பகுதியில் காணலாம்.
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்:
இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி, நடு இலைகளை உண்ணுவதால் அப்பகுதியில் துவாரங்கள் ஏற்படும். அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி, பிறகு காய்ந்து விடும். துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்து கொண்டிருக்கும். கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும்.
பாதிப்பை உண்டாக்கும் பூச்சிகளின் விவரம்:
முட்டை : இலைகள் மற்றும் தண்டுகளில் பால் வெள்ளை நிறத்தில், உருண்டையான வடிவத்தில் கொத்து கொத்தாக முட்டைகள் காணப்படும். முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்.
புழு : இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில் மென்மையாக உருளை வடிவத்தில், கருஞ்சிவப்பு நிறத் தலையுடன் கூடிய புழுக்கள் காணப்படும். புழுப்பருவத்தின் காலம் 22 நாட்கள் ஆகும்.
கூட்டுப்புழு : தண்டுகளில் அடர் பழுப்பு நிறத்தில், தலையில் ஊதா புள்ளியுடன் கூடிய கூட்டுப்புழுக்கள் காணப்படும். கூட்டுப்புழுக்களின் காலம் 8 நாட்கள் ஆகும்.
முதிர் பூச்சி : நடுத்தர அளவிலான, மங்கிய மஞ்சள் பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் பயிரில் காணப்படும். முன் இறகுகள் லேசான பழுப்பு நிறத்தில், இரண்டு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். பின் இறகுகள், வெள்ளை நிறத்தில், நரம்புகளில் மஞ்சள் நிற செதில்களுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட துவக்கத்திலேயே காய்ந்த குருத்துகளை பிடுங்கி எறிந்திடவும். மேலும், குறுகிய கால, தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கையாளுவது பலன் கொடுக்கும். இது தவிர்த்து, சரியான அளவு தழைச்சத்து உரங்களை முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.
டை மெத்தோடே 30%EC அல்லது குயினால்போஸ் 25% EC 1500 மி.லி /ஹெக்டர் தெளிக்கவும் .ஹெக்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம். முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிராம்மா சிலோனிஸ் @ 12 சி.சி / எக்டர் பயன்படுத்தவும். கார்பரில் 50 WP @ 1 கிலோ/எக்டர் தெளிக்க வேண்டும்.
மேலும் படிக்க :
நெற்பயிரை தாக்கும் துங்ரோ, பிரவுன் ஸ்பாட் நோய்களுக்கு என்ன தீர்வு?
காட்டு பன்றிகளை விரட்ட புதிய டெக்னிக்! அசத்தும் புதுச்சேரி விவசாயிகள்!