விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் பெரும் பிரச்னையாக இருப்பது பூச்சி தாக்குதலாகும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், விளைச்சலும் பாதிக்கப்பட்டு, விளைபொருளின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், முக்கிய பயிருடன், அதற்கேற்ற கலப்பு மற்றும் ஊடுபயிர்களை சாகுபடி செய்வதால், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த
பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் அலுவலர் துளசிமணி கூறுகையில்,
விளைநிலத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் தட்டைப்பயறு பயிரிட்டால், பொறிவண்டுகள் அந்த பயிரில் குடியேறும். அவை, சாறு உறிஞ்சம் பூச்சிகளை அழிக்கும்.
நிலக்கடலை சாகுபடியில், வரப்பு ஓரங்களில், 2 மீட்டர் இடைவெளியில் ஆமணக்கு செடிகளை நட்டால், புரோடீயா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். நிலக்கடலையில் ஏக்கருக்கு, 250 கிராம் கம்பு கலப்பு பயிராக விதைத்தால், நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
சோளத்தில், துவரை, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்தால், தத்துப்பூச்சி, காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிட்டால் புரொடினியா புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதால் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.
இதுபோன்று முக்கிய பயிர்களை அதற்கேற்றார்போல கலப்பு பயிர்களை பயிரிடுவதன் மூலம் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
மேலும் படிக்க....
தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!
வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது!