PM-Kisan திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 உதவித்தொகை இந்த வாரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மே 14ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவே, இந்தத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ரூ.2,000 உதவித்தொகை
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு PM-Kisan Samman Nidhi எனப்படும் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பயனடையக் கூடிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 தவணைகளாக ரூ.6.000 பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் தலா ரூ.2,000 பணம் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 10ஆவது தவணைத் தொகை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 11ஆவது தவணைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்பதால், கோடிக்கணக்கான விவசாயிகள் அதனைப் பெறுவதற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த 11-வது தவணைத் தொகை இன்னும் சில நாட்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. அதாவது மே 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பணம் செலுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளுக்கு உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. அதே சமயம், கடந்த மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட உதவித்தொகையை மத்திய அரசு மே 14ஆம் தேதியன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தியது. அதன்படி இந்த ஆண்டிலும் மே 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், விவசாயிகள் தங்களுக்கான உதவித்தொகையை பெறுவதற்கு இ-கேஒய்சி அப்டேட் செய்திருக்க வேண்டும். இந்த அப்டேட்டிற்கு மே 31ஆம் தேதி வரை காலக்கெடுவை மத்திய அரசு அண்மையில் நீட்டித்தது.
இ-கேஒய்சி எப்படி செய்வது?
ஆதார் கார்டு அடிப்படையில் ஓடிபி பெற்று இ-கேஒய்சி அப்டேட் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போதைய சூழலில், ஆதார் கார்டு பயன்படுத்தி ஓடிபி மூலமாக நீங்கள் இதை அப்டேட் செய்ய முடியாது. நமது பயோமெட்ரிக் விவரங்களை உறுதி செய்வதன் மூலமாகத்தான் இ-கேஒய்சி அப்டேட் செய்ய முடியும். ஆகவே, விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று, பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பித்து இதை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
ஓய்வூதியத் தொகையைக் கொடுக்க முடியாது- மத்திய அரசு கைவிரிப்பு!