பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் (PM Kisan) கீழ் 10வது தவணையாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார். நாடு முழுதும் உள்ள 10.09 கோடி விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதி தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 'டிபாசிட்' செய்யப்படுகிறது.
10வது தவணை (10th Installment)
இந்த திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை நிதி கடந்த ஆண்டு ஆகஸ்டில் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் 10வது தவணையாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒன்பது மாநிலங்களின் முதல்வர்கள், மாநில அமைச்சர்கள், வேளாண் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தற்போது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டில், 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன. ஜி.எஸ்.டி., (GST) வாயிலாக இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பணம் ஈட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம். குறிப்பாக வேளாண் துறையில் அதீத வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது.
சிறந்த வழி (Best Way)
நம் பூமியை தரிசாக விடாமல் காப்பாற்ற, ரசாயனமற்ற விவசாயம் என்பது ஒரு சிறந்த வழி. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை கொரோனாவால் தடுக்க முடியாது. முழு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடும்.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி 1.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிரதமருக்கு நன்றி!
விவசாய உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை விவசாயிகளுக்காக விடுவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. விவசாயிகளுக்கு அதிகாரமளிக்காவிட்டால் நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிடும். கடந்த ஏழு ஆண்டுகளாக விவசாயிகளுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது.
மேலும் படிக்க