வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
மண்புழு உரத்தினை எளிதில் சிறு, குறு விவசாயிகளும் உற்பத்தி செய்யலாம் என்கிற நிலையில் அதற்கான படுக்கை தயார் செய்வது எப்படி, கழிவுகளை எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்களை திருவள்ளூர் மாவட்டம் திரூர் பகுதியிலுள்ள வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகளும், பேராசிரியர்களுமான தமிழ்செல்வி, சிவகாமி, யோகமீனாட்சி, விஜயசாந்தி, ப்ரீத்தி, பானுமதி ஆகியோர் ஒருங்கிணைந்து கட்டுரை தொகுத்துள்ளனர். அவற்றின் தகவல் பின்வருமாறு-
மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்:
ஒரு சிமெண்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடியாக இருக்க வேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலே சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.
மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை:
நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.
கழிவுகளை படுக்கையில் போடும் முறை:
பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம் X 1மீட்டர் அகலம் X 5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.
தண்ணீர் தெளிக்கும் முறை:
தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது. 60 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக்கூடாது, அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விட வேண்டும்.
மண்புழு உரத் தொழில் நுட்பத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் அவர்களின் பண்ணைகளிலேயே மேற்கொண்டால் மண் வளத்தைக் காத்து உற்பத்தியைப் பெருக்க சிறந்த வழியாக இருக்கும். இந்த மண்புழு உரத் தொழில்நுட்பமானது ஒரு நாளிலேயே உழவர்கள் பயிற்சி பெற்று அறியக்கூடிய ஒரு எளிய தொழில் நுட்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
கொப்பரை மற்றும் பயறு கொள்முதலுக்கான தேதி மாவட்டம் வாரியாக அறிவிப்பு!
ஒரே நேரத்தில் 6 வரிசையில் நெல் நடவு- மஹிந்திராவின் 6 RO Paddy Walker சிறப்பம்சம்!