திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சம்பா பருவத்திற்கான நெல் நடவுப் பணி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சம்பா பருவத்தில் சுமார் 48124 எக்டர் பரப்பளவிலான நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழைபெய்து வருகின்றது.
பருவமழை காலங்களில் வயல்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வடித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
வடகிழக்கு பருவமழையின் போது, பயிர் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருமழை காலத்தில் பயிர் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பருவமழையின் காலத்தில், வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை உடனுக்குடன் வடிக்க வேண்டும். மழையால் மண்ணிலிருந்து அடித்து செல்லப்படும் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
பயிர்களில் நுண்ணூட்டச் சத்துகுறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால், யூரியா மற்றும் நுண்ணூட்ட உரங்களை இலை வழியாக தெளிக்கலாம். வடகிழக்கு பருவமழையில், அதிகமாக ஓடும் நீரினை பண்ணைக் குட்டைகள் மூலம் சேமித்து, நிலத்தின் நீர் மட்டத்தை உயர்த்தலாம். பருவமழையின் போது ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அறுவடை நிலையில் உள்ள நெல் வயல்களில், பருவமழையினால் தேங்கும் மழைநீரினை முழுவதுமாக வடிக்க வேண்டும்.
நெல் வயல்களில் உள்ள மழைநீரினை வடித்த பிறகு மேலுரமாக ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ இடுவதன் மூலம், மழையினால் பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்.
தென்னை விவசாயிகளுக்கு Good news- 2 லட்சம் வரை மானியம்!
பருவமழையினால் பாதிப்பு அடையும் இளம்பயிர் மற்றும் தூர் கட்டும் பயிர்களை பாதுகாப்பதற்கு ஏக்கருக்கு 1 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் ஒரு இரவு ஊறவைத்து, மறுநாள் மேல் உள்ள தெளிந்த நீரினை மழை நின்றவுடன் தெளிக்கலாம். மேலும் தூர்விடும் பருவத்தில் உள்ள நெற்பயிறுக்கு 4 கிலோ DAP 10 லிட்டர் நீரில் ஒரு இரவு ஊறவைத்து, மறுநாள் மேல் உள்ள தெளிந்த நீருடன் 2 யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 200 லிட்டர் நீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
மேலும், விவசாயிகள் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சம்மந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம் என மாவட்டஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க: