கரூர்: மாநில அளவில் புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்பு மற்றும் புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை காணுங்கள்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு என்ற தலைப்பின் கீழ் வழங்கப்படும் என்று 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாநில அளவில் புதிய வேளாண்மை தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபடிப்புக்கு ரூ.1 லட்சம் மற்றும் வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் பெரிமளவில் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். இணைப்பின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்.
விவசாயிகள் தனது சாதனை குறித்த விளக்கம் மற்றும் விவரங்களுடன் மாவட்ட கண்டுபிடிப்பானது அவரது சொந்த கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் தொழில்நுட்பம் வேளாண்மை அல்லது பிற துறைகளில் பரிந்துரை செய்யப்படாததாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இக்கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு எதுவும் பெற்றதாக இருக்கக்கூடாது. விருதிற்கு சமர்பிக்கப்படும் இயந்திரம் வேறு ஒரு தனி நபருடைய அல்லது ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பின் அல்லது தயாரிப்பின் அசலாகவோ அல்லது சாயலாகவே அல்லது மேம்படுத்தப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. இதற்கான குறிப்புரை வேளாண் பொறியியல் துறையின் மூலம் பெறப்பட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைப்பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதுபோல் உள்ளூர் கண்டுப்பிடிப்பானது விவசாயிகளால் எளிதில் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பினை மதிப்பாய்வு செய்து இதற்கான குறிப்புரை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலை கழக விஞ்ஞானிகளிடம் பெறப்பட வண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விவசாயிகளின் வேளாண்மை செலவினத்தை குறைக்கக் கூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதிக விளைச்சலை தரக்கூடியதாகவும், பயன்படுத்தக்கூடிய கருவியாகவும் மற்றும் மனித உழைப்பை குறைத்து நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அறிமுகப்படுத்தப்படும் இயந்திரம் அடிக்கடி பழுதுப்படாததாகவும், அவ்வாறு பழுது ஏற்படும் பட்சத்தில் உள்ளூரிலேயே பழுது நீக்கம் செய்யக்கூடிய அடிப்படை வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட நிபந்தனைகளுடன் புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்பு மற்றும் புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு மாநில அளவில் மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை உரிய இணைப்புகளுடன் 30.11.2022-க்குள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
(குறிப்பு: இச்செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் கரூரில் இருந்து வெளியானது)
மேலும் படிக்க:
"விராசாட்-2" திட்டம்: 6% வட்டியில் கைவினைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி!
வேளாண் இயந்திரங்கள், கருவிகளை 50% மானியத்தில் பெற இன்றே விண்ணப்பிக்கவும்